பறையர்கள்
‘பறையன்’ என்ற சொல் உலக அளவில் தீண்டாமையைக் குறிக்கப் பல மொழியினரும் பயன்படுத்தும் சொல்லாகி வருகிறது. ‘தமிழர்கள் யார்?’ எனும் தலைப்பில் வித்தாலி பூர்ணிக்கா எனும் ருஷ்ய நாட்டு அறிஞர் எழுதிய ஒரு கட்டுரையில் ‘பறை முழக்கிய பறையர்களின் வாழ்க்கை சமூகத்தில் மிகத் தாழ்வானதாகக் கருதப்பட்டது. அவர்கள் தனித்து வாழ நேர்ந்தது. பிற சமூகத்து மக்களோடு இணைந்து வாழ முடியாதபடி தடுக்கப்பட்டிருந்தார்கள். தமிழகத்தில் இப்படிப் பெயர் பெற்ற ‘பறையர்கள்’ என்ற சொல் பல உலக மொழிகளில் இடம் பெற்றிருக்கிறது. ‘பறையர்கள்’ என்ற சொல் உலக மொழிகளில் இடம் பெற்றிருப்பது ஒருவகையில் பெருமைதான் என்றாலும், சமூக அநீதியின் சின்னமாக வழங்கப்பெறும் நிலைமை மாற வேண்டும் என்பதே முற்போக்காளர்களின் இன்றைய சிந்தனையாகத் திகழ்கிறது!’ என்று குறிப்பிடுகின்றார்.
தமிழ்ச் சமுதாயத்தின் ஆதி நிலை வாழ்க்கையைப் பற்றி பேசும் சங்க இலக்கியத்தில் காணப்படும் செய்திகளைப் பார்க்கையில் அக்காலச் சமுதாயமானது பிற்காலத்தில் காணப்பட்டதைப் போன்று ஏற்றத் தாழ்வானதாக இருக்கவில்லை என்பது தெரியவருகிறது. கி.மு. 100ம் நூற்றாண்டு தொடங்கி கி.மு. 300ம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தில் நிலவிய தமிழ்ச் சமுதாயத்தில் பல்வேறு விதமான உற்பத்தி முறைகள் நிலவின என்பதை ஐந்தினை நிலங்கள் குறித்த விவரணைகளிலிருந்து அறியமுடிகிறது. சாதி அமைப்பு போன்றதொரு அமைப்பினை இக்காலக்கட்டத்தில் அடையாளம் காண முடியாது என்ற போதிலும் ஒரு சிலர் ‘கீழ்மக்களாக’க் கருதப்பட்டதற்கானச் சான்றுகள் உள்ளன.

தோல் தொடர்பான தொழில்கள், துணி வெளுக்கும் தொழில், மீன் பிடித்தொழில் முதலியவற்றை மேற்கொண்டவர்கள் ‘அசுத்த’மான வேலைகளைச் செய்பவராக கருதப்பட்டனர். மரணச் சடங்குகளுடன் தொடர்புடைய பிரிவினரும் இவ்வாறே கருதப்பட்டனர். ஏனையோர் மனத்தில் கட்டுக்கடங்காத பயத்தையும் பீதியையும் உண்டாக்கவல்ல அலாதியான ஆற்றல் கீழ்மக்களாகக் கருதப்பட்டவர்களிடம் இருப்பதாக நம்பப்பட்டது. பெண்களிடத்தும், பாணர்கள், பாடினியர், விறலியரிடத்தும் இத்தகைய ஆற்றல் குடிகொண்டிருந்ததாக சங்ககால மக்கள் நம்பினர். குழுத்தலைவர்களுடனும் குறுநில மன்னர்களுடனும் இணைந்து அவர்கள் போர்புரிந்த காலங்களில் அவர்களது பெருமைபாடி, தமது கற்பனையாற்றலாலும், அபாயகரமான சக்தியாலும் அரசர்களுக்கு தைரியத்தையும், உன்மத்தத்தையும் பாணர்களும் பிறரும் ஊட்டினர்.
கீழ்மக்களாயினும் அவர்கள் அரசனுக்குப் பெருமை சேர்ப்பவராகவே கருதப்பட்டனர். ஆனால் காலப்போக்கில் அம்மக்கள் செல்வாக்கிழந்தனர். கி.பி. 300ம் நூற்றாண்டுக்குப் பிறகு பார்ப்பனர்கள் தமிழ்ச் சமுதாயத்தில் தமது மேலாண்மையை நிறுவ வந்தனர். ஆன்மீக அறிவுடையராகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு தமிழ் அரசர்களின் கவனத்தை ஈர்த்தனர். நாளாவட்டத்தில் பார்ப்பனர்கள் மன்னர்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் பெறத்தக்கவராயினர். பழைய சமுதாய ஏற்பாட்டில் பாணர்களுக்கும் பிற ‘கீழ் மக்களுக்கும்’ இருந்த செல்வாக்கும் முக்கியத்துவமும் குறையவும் அவர்கள் வெறும் கீழ் மக்களாக மட்டும் தாழ்த்தப்படவும் இந்த நிகழ்ச்சிப் போக்குகள் காரணமாக அமைந்தது.
ஆரியர்கள் வருவதற்கு முன் இந்தியாவில் வாழ்ந்த நாகரிக இனமான நாகர் அல்லது திராவிட இனத்தின் சிதறுண்ட மனிதர்கள்தான் பின்னர் தீண்டப்படாதார் என அழைக்கப்பட்டனர்.
தாசால் அல்லது தாசர்கள் என்பவர்கள் நாகர்களே. இவர்கள் ஹரப்பா நாகரிகத்துக்கு உரியவர்கள். நாகர்களோடு திராவிடர்கள் கொண்டிருந்த தொடர்பு மணிமேகலை நூலில் வருகின்றது. நாகர்கள் தொடர்புடைய நாகப்பட்டினர், நாகூர், நாகர்கோயில், நாகபுரி, நாகாலாந்து என்ற கடற்கரை மற்றும் உள்நாட்டு பட்டினங்கள் இன்றும் உள்ளன. தமிழ்நாட்டுக்கு நாவந்தீவு என்ற ஒரு பெயரும் உண்டு. இது நாகர்களை அடிப்படையாகக் கொண்ட பெயராகும். நாகர்கள் என்பதும், திராவிடர்கள் என்பதும் ஒரே கலாச்சாரத்தைச் சார்ந்த பழங்குடி மக்கள். இவர்களது தாய்மொழியாகிய தமிழ்மொழி ஒரு கால கட்டத்தில் இந்தியா முழுவதும் வழக்கில் இருந்தது.
நாகர்கள் பறையர்களின் மூதாதையர் என ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இவர்கள் தென்னகத்தை ஆண்டதாக வரலாறு உள்ளது. நாகர்களின் கலாசாரமும் நாகரிகமும் தமிழகத்தில் பரவியிருந்தது. நாகர்களும் திராவிடர்களும் ஒரே இனத்தவர் என்று டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார்.
பல்லவ அரசகுடித் தோன்றல் ‘தொண்டைமான் இளந்திரையன்’ என்பவன் நாக இளவரசி பீலிவனை என்பவளின் மகனாவான். மகாராஷ்டிரம், ஆந்திரம், சிலோன் போன்ற நாடுகள் நாகர்கள் ஆட்சியில் பல ஆண்டுகள் இருந்து வந்துள்ளன. ஆந்திரப் பகுதிகளை ஆண்ட சாதவாகனர்கள் நாகர்கள் எனவும் இவர்கள் ஆதிதிராவிடர் வழிவந்த திராவிடர்களே எனவும் அம்பேத்கர் கூறுகிறார்.
நாகர்களால்தான் தண்டகாரண்யவனம், மக்கள் வாழும் பகுதியாக மாற்றப்பட்டது என்ற கருத்துள்ளது. ஆரிய நாகரிகத்தை ஏற்றுக்கொண்ட சேர, சோழ, பாண்டியர்கள், நாகர்களை வென்று தாழ்வான பணிகளுக்கு ஆட்படுத்தியும், அவர்களை தனியே ஒதுக்கி வைத்தும் தீண்டாத நிலைக்குக் கொண்டுச் சென்றார்கள்.
சங்க காலத்தில் சிறந்த இசைக் குடிகளின் வரிசையில் இடம் பெற்ற பறை முழக்கிய மக்கள் அக்கருவியையே அடையாளமாகக் கொண்டு குறிப்பிடப்பட்டனர். ‘பறை’ என்ற சொல்லும், பறை கொட்டுகிறவர் ‘பறையர்’ என்ற சொல்லும் தாழ்ந்த பொருண்மையை சங்ககாலத்தில் தரவில்லை, காப்பியத்திலும் தரவில்லை. ஏறத்தாழ சோழர் காலத்தில் இக்கொடுமைத் தொடங்கி கி.பி. 16, 17ம் நூற்றாண்டில் உச்ச நிலையை அடைந்தது.
பறையர் சங்ககாலச் சமுதாயத்தில் மிகக் கௌரவமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.
‘தீண்டாதார் பழங்கீர்த்தி தெரிந்தால்
தீண்டாமைப் பட்டம் வேண்டாதார் இல்லையடி சகியே’
என்ற பாரதிதாசனின் சமத்துவப் பாடலின் வரிகளிலிருந்து இதனை உணர முடிகிறது.
‘பாணன், பறையன், கடம்பன், துடியன் இந்நான்கல்ல; குடியுமில்லை’ என்ற புறநானூற்று வரிகளில் இவர்கள் முக்கியக் குடிகளாகக் கருதப்படுகின்றனர். பண்டைய தமிழகத்திலிருந்த இந்த நான்கு அடிப்படைக் குடியிலிருந்துதான் ஏனைய குடியினர் தோன்றியுள்ளனர்.

‘பறையர் இழி குலத்தினர்’ என்று சங்க இலக்கியங்களில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் துடியர்கள் இழியர், இழிப்பிறப்பாளர் எனக் கூறப்பட்டுள்லனர். இவர்கள் புலையரெனவும் அழைக்கப்பட்டுள்ளனர். தூய்மையற்ற அசுத்தமான சமூகப் பணிகளைச் செய்பவர்கள் அனைவரும் புலையர் என்று பொதுவாக அழைக்கப்பட்டுள்ளனர். பிறப்பு அடிப்படையிலும், தொழில் அடிப்படையிலும் சாதிமுறை அமைதல் என்பது சங்ககாலத்தில் காணப்படாத ஒன்று.
ஆரியப்படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன் என்ற மன்னன், தமிழ்ச் சமுதாயத்தில் நான்கு வகுப்பினர் இருந்ததாகக் கூறுகிறார். இந்நூல் குலத்தில் கீழானவன் என்று கல்லாதாரை மட்டுமே கூறியுள்ளது, தமிழ்ச்சமுதாயம்.
‘நாற்பாற் குலத்தில் மேற்பால் ஒருவன் கற்றிலனாயின் கீழிருப்போனே’ என்று புறநானூற்று அடிகள் குறிப்பிடுகின்றன. கற்காதவர்கள் குலத்தால் உயர்ந்தவர்களாயினும், கற்றவர் முன் கீழோரே என்பது தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்த உயர்ந்த நீதியாகும்.
கீழே உள்ள குறிப்புகளின் அடிப்படையில், நாம் யாரைப் பற்றி பேசப்போகிறோம் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா என்று பாருங்கள்.
- பல மொழிகள் பேசும், பலவகையான வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்கள் இந்த மக்கள். இந்தியா, எகிப்து போன்ற நாடுகளிடம் இந்தக் கலாசாரத்தின் தாக்கம் இருக்கிறது.
- சுமார் 10,600 வருடங்களுக்கு முன்பாகவே, வீடுகளில் செடி, கொடி, மரங்கள், மிருகங்கள் வளர்த்தார்கள்.
- சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பாகவே, மிருகங்களைத் தனியாக வளர்ப்பதிலிருந்து முன்னேறி, ஆட்டு, மாட்டு மந்தைகளைப் பராமரித்தார்கள்.
- சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பாகவே, மீன் பிடிக்கும் வழக்கம் இருந்தது.
- பேச்சு மொழி, ‘கல்தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த’ மொழி. ஆனால், எழுத்து வடிவ மொழி சுமார் 6200 வருடங்களுக்கு முன்பாகவே நடைமுறையில் இருந்தது.
- கி.மு. 6000ம் ஆண்டிலேயே மக்கள் வாழ்க்கையில் கணிதம் அங்கம் வகித்தது. நிலங்களை அளப்பதற்காகப் பெருவாரியாகப் பயன்படுத்தப்பட்டது. 60 இலக்கங்கள் (Numerals) இருந்தன.கண்டறிய முடிந்ததா? இன்னும் ஒரு க்ளூ. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இத்தனை பிரமாண்ட முன்னேற்றங்களைக் கண்டுவிட்டதால் உலகின் எல்லா நாகரிகங்களையும் விட, இந்தப் பிரதேச மக்களின் வாழ்க்கை முறைதான் முந்தையது என்கிறார்கள் வரலாற்றுஆசிரியர்கள். இதனால், நாகரிகத்தின் தொட்டில் என்றும் இவர்கள் வாழ்ந்த பிரதேசம் அழைக்கப்படுகிறது.ஆம், நாம் இங்கே முதலில் பார்க்கப்போவது மெசபடோமியா. இங்கே வாழ்ந்த மக்கள் சுமேரியர்கள்.
பூகோளம்
இன்றைய இராக் நாட்டோடு சிரியா, துருக்கி, இரான் ஆகிய நாடுகளின் பகுதிகளை இணைத்த நிலப்பரப்பே மெசபடோமியா. கிரேக்க மொழியில் மெசபடோமியா என்றால் இரண்டு நதிகளுக்கு நடுவே உள்ள இடம் என்று பொருள். அந்த இரு நதிகள், யூப்ரட்டீஸ் மற்றும் டைக்ரிஸ்.வடக்குப் பாகம் மலைகளும் சமவெளிகளும் இருந்தன. பருவ மழை தவறாமல் பெய்ய, இந்த நில அமைப்பே காரணம். இதனால், காலம் பொய்த்தாலும், இந்த நதிகள் பொய்க்கவில்லை. வட பகுதியான மெசபடோமியா பொன் விளையும் பூமியாக இருந்தது.
உலகத்தில் எல்லா நாகரிகங்களும் தோன்றுவதும் வளர்வதும் நதிக்கரைகளில்தாம். இதற்குக் காரணம் உண்டு. மனிதனின் அடிப்படைத் தேவை உணவு. வயிறு நிறைந்திருந்தால்தான் அவனால் வாழ்க்கையின் பிற அம்சங்களில் கவனம் செலுத்தமுடியும். இசை, இலக்கியம், விளையாட்டு என்னும் கலைகளில் ஈடுபட முடியும், கலைகளை வளர்க்கமுடியும். இந்த வளர்ச்சிதானே நாகரிகம்! மெசபடோமிய நாகரிக வளர்ச்சிக்கும் ஜீவநாதம் யூப்ரட்டீஸ், டைக்ரிஸ் ஆறுகள்தாம்.
முக்கிய மன்னர்கள்
மெசபடோமியாவை மன்னர்கள் ஆண்டார்கள். இவர்களுள், முக்கியமானவர்கள்
மூவர்:
1. கில்காமேஷ் (Gilgamesh)
இவர் கி. மு 2600ல் வாழ்ந்தார். மெசபடோமியாவின் ஒரு பகுதியான உருக் (Uruk) என்கிற ஆற்றங்கரைப் பகுதியை 126 ஆண்டுகள் இவர் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இவர் மறைந்து ஐந்து நூற்றாண்டுகளுக்குப்பின் அவருடைய வாழ்க்கை வரலாற்றை கில்காமேஷ் காவியம் என்று எழுதி வைத்தார்கள். உலகத்தின் மிகப் பழமையான இலக்கியப் படைப்பு இதுதான் என்பது அறிஞர்கள் கணிப்பு. இந்தக் காவியம் களிமண் பலகைகளில் 12 பாகங்களாக எழுதப்பட்டது. இந்த நூலின் பல பகுதிகள் கிடைத்துள்ளன. வீர சாகசம் நிறைந்தவராக, மனிதராகப் பிறந்த கடவுள் அவதாரமாக இந்தக் காவியம் கில்காமேஷை வர்ணிக்கிறது.
2. ஹம்முராபி (Hammurabi)
இவர் கி. மு. 1792 ல், தன் பதினெட்டாம் வயதில், மெசபடோமியாவின் பகுதியான பாபிலோன் சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்தியாகப் பதவியேற்றார். ஒன்றுபட்ட மெசபடோமியாவை உருவாக்கினார்.
அந்த நாட்களில் எது நியாயம், எது தவறு, எந்தக் குற்றங்கள் செய்தால் என்ன தண்டனைகள், என்பவை வரையறுக்கப்படவில்லை. இவற்றை ஒழுங்குபடுத்தியவர் ஹம்முராபி. 282 குற்றங்களும், ஒவ்வொன்றையும் செய்தால் என்னென்ன தண்டனை என்னும் விவரங்களும் பட்டியலிடப்பட்டன. பொதுமக்கள் அனைவரும் தெரிந்துகொள்வதற்காக, இவை 12 களிமண் பலகைகளில் எழுதப்பட்டு பிரம்மாண்டமான தூண்போன்ற அமைப்பில் பதிக்கப்பட்டன. இவை ஹம்முராபி சட்டங்கள் (Hammurabi Code) என்று அழைக்கப்படுகின்றன.
ஹம்முராபி சட்டங்கள் உள்ளடக்கியிருக்கும் அம்சங்கள் – மதம், ராணுவ சேவை, வியாபாரம், அடிமைகள், தொழிலாளர்களின் பொறுப்புகள் போன்றவை. இன்றைய சூழலில், சில சட்டங்கள் விநோதமாகத் தோன்றினாலும், அன்றைய வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பவை என்னும் கண்ணோட்டத்தில் நாம் இந்தச் சட்டங்களைப் பார்க்கவேண்டும்.
யாராவது இன்னொருவர் மேல் குற்றம் சாட்டினால், இருவரும் நதிக்கரைக்குப் போகவேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் நதியில் குதிக்கவேண்டும். மூழ்கினால், அவர் குற்றவாளி என்று அர்த்தம். அவருடைய மொத்த சொத்துக்களும் குற்றம் சாட்டியவருக்கு சொந்தம். தண்ணீரில் மூழ்காமல் தப்பித்தால், அவர் நிரபராதி. குற்றம் சாட்டியவருக்கு மரண தண்டனை. அவர் சொத்துகள் முழுக்க, பொய்க் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு அளிக்கப்படும்,
ஒரு வியாபாரி, வியாபாரத்தில் முதலீடு செய்ய, தரகரிடம் பணம் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம்.இந்தப் பணம் நஷ்டமானால், அதைத் தரகர் வியாபாரிக்கு ஈடு கட்டவேண்டும்.
3. நெபுகாட்நேஸர் (Nebuchadrezzar II)
கி. மு. 605 முதல் நாற்பது ஆண்டுகள் பாபிலோன் பகுதியை ஆண்டவர். சாலைகள் அமைத்தும், கால்வாய்கள் வெட்டியும், கோயில்களைப் புதுப்பித்தும், பல முன்னேற்றங்கள் செய்தவர். பழங்கால உலக அதிசயங்களில் ஒன்றான பாபிலோன் தொங்கு தோட்டம் இவருடைய உருவாக்கம்தான். கட்டடக் கலையில் மெசபடோமியரின் அற்புதமான திறமையைத் தொங்கு தோட்டம் பறை சாற்றுகிறது.
இது ஓர் அடுக்குத் தோட்டம். பெரிய பெரிய தூண்களை எழுப்பி அவற்றின்மேல் பல அடுக்குத் தளங்களை எழுப்பி ஒவ்வொரு அடுக்கிலும் தோட்டங்கள் போடப்பட்டன. செயின் பம்ப் (Chain Pump) என்கிற அமைப்பின் உதவியால் யூப்ரட்டீஸ் நதியின் தண்ணீர் தொங்கு தோட்டத்தின் உச்சிக்குக் கொண்டுபோகப்பட்டது. பின்னாளில் வந்த பூகம்பம் தொங்கு தோட்டத்தை அழித்துவிட்டது.
மத நம்பிக்கைகள்
கில்காமேஷ் மன்னர், மூன்றில் இரண்டு பங்கு தெய்வம், மூன்றில் ஒரு பங்கு மனிதர் என்று கில்காமேஷ் காவியம் வர்ணிக்கிறது. மன்னர்களுக்கும், மக்களுக்கும் அதீதக் கடவுள் நம்பிக்கை இருந்தது.
உலகம் தட்டையான வடிவம் கொண்டதாக சுமேரியர்கள் நம்பினார்கள். பூவுலகுக்கு மேலே, கடவுள்கள் வாழும் சொர்க்க லோகம். பூவுலகையும், சொர்க்கத்தையும் சுற்றி வளைத்து நான்கு பக்கங்களிலும் கடல். இந்தக் கடலிருந்துதான் பிரபஞ்சம் உருவானது.
நிலம், நீர், காற்று, நெருப்பு , ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள்தாம் முதல் கடவுள்கள்.
இவர்களுள் வாயு பகவான் பிறரைவிட அதிக சக்தி வாய்ந்தவர். பஞ்ச பூதங்களுக்கு எல்லா ஊர்களிலும் கோயில்கள் இருந்தன. ஆரம்பத்தில் கடவுள்களை ஊருக்கு நடுவே பெரிய மேடைவைத்து வழிபட்டார்கள். இந்த மேடையைச் சுற்றிக் கட்டடம் எழுப்பினார்கள்.
கிமு 2200 – 500 இடைப்பட்ட காலத்தில் ஸிகுரட்கள் (Ziggurats) என்னும் வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட்டன. ஸிகுரட் என்றால் கடவுளின் மலை என்று பொருள். இவை வெறும் கட்டங்களல்ல, அழகு கொஞ்சும் பிரம்மாண்டங்கள். கோட்டைபோல் களிமண் செங்கல்லாலும் உட்பக்கம் சுட்ட செங்கற்களாலும் உருவாக்கப்பட்டவை. சுற்றிலும் பிரமிட்போல் சரிந்த சுவர்கள், அவற்றில் ஏராளமான படிகள். கோவிலுக்குள் மேடைமேல் கடவுள் சிலை. பிரம்மாண்ட வடிவம், சிறப்பான கட்டமைப்பு, சுவர்களில் கண்ணைக் கவரும் ஓவியங்கள், சிற்பங்கள், உலோகங்களால் உருவாக்கப்பட்ட கலைப்பொருட்கள், பளபளப்பும் வழவழப்புமான தரை ஆகியவை ஸிகுரட்களின் சிறப்புகள்.
கோயில்கள் மத குருக்களால் பராமரிக்கப்பட்டன. சமூகத்தில் அதிக மரியாதை பெற்றவர்கள் மதகுருக்கள்தாம். மக்கள் மட்டுமல்ல, அரசர்களும் இந்தப் பூசாரிகளை ஆண்டவனின் மறுவடிவமாக நம்பினார்கள். மன்னர்களும் மக்களும், எல்லாப் பிரச்னைகளுக்கும் மத குருக்களை நாடினார்கள். அவர்கள் முடிவுதான் இறுதியானது. குருமார்களின் தேவைகளுக்கும் கோயுலின் பூஜை, நைவேத்தியச் செலவுகளுக்குமாக அரசாங்கம் எல்லாக் கோவில்களுக்கும் விவசாய நிலங்கள் அளித்தது. இவற்றைப் பராமரித்து, கோயில்களுக்குத் தேவையான செலவுகள் செய்து, மிச்சத்தை மதகுருக்கள் வைத்துக்கொள்ளலாம். கணிசமான வருமானம், சமூக அந்தஸ்து ஆகிய காரணங்களால், பூசாரி ஆவதற்கு எக்கச்சக்கப் போட்டி இருந்தது.
நாகரிகம் – நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை. அதே சமயம், அதன் முழுமையான அர்த்தம் அல்லது உண்மையான அர்த்தம் நமக்கு தெரியாது.
வரலாற்று அறிஞர்கள், அகழ்வாராய்ச்சி அறிஞர்கள் ஆகியோரையே திணற அடிக்கும் வார்த்தை இது. நாகரிகத்தை ஆங்கிலத்தில் Civilisation என்று சொல்கிறோம். Civilis என்னும் லத்தீன் வார்த்தை ஆங்கிலச் சொல்லின் அடிப்படை. Civilis என்றால், குடிமகன், நகரம். இந்த அடிப்படையில், மனிதன் சமுதாயமாக வாழ ஆரம்பித்ததுதான் நாகரிகத் தொடக்கம் என்று சிலர் சொல்கிறார்கள். லத்தீன் மிகப் புராதனமான மொழிதான். ஆனால், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த மொழி அல்ல. மனித நாகரிகம் லத்தீன் மொழியைவிட முந்தையது. பின்னால் பிறந்த அளவுகோலால், முந்தைய வளர்ச்சியை அளப்பது தவறு. ஆகவே, இன்னும் சில வர்ணனைகளைப் பார்ப்போம்.
ஸ்காட்லாந்தின் தத்துவ மேதையும், வரலாற்று நிபுணருமான ஆடம் ஃபெர்கூஸன் (Adam Ferguson) 1767ல் எழுதிய An Essay on the History of Civil Society என்னும் புத்தகத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார். நாகரிகம் என்றால், ‘தனிமனிதன் குழந்தைப் பருவத்திலிருந்து மனிதத் தன்மை உடையவனாக வளர்ச்சியடைவது மட்டுமல்ல, மனித இனமே, முரட்டுத்தனத்திலிருந்து பண்பாட்டுக்கு முன்னேறுவது.’
மருத்துவம், மதம், தத்துவம் ஆகிய பல துறைகளில் அழியாக் கால்தடம் பதித்த ஜெர்மன் அறிஞர் ஆல்பர்ட் ஸ்விட்சர் (Albert Schweitzer) இன்னும் அற்புதமாக வர்ணிக்கிறார். நாகரிகம் என்பது ‘எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும், எந்தச் செயல்கள் மனித ஆன்மாவைச் செம்மைப்படுத்துகின்றனவோ, அவற்றின் ஒட்டுமொத்த முன்னேற்றம்.’
அமெரிக்கக் கார்னெல் பல்கலைக் கழகப் பௌதீகப் பேராசிரியர் ஸ்டீஃபன் ப்ளாஹா (Stephen Blaha) நாகரிகத்தை இப்படி வரையறுக்கிறார். ‘ஒரே வாழ்க்கைமுறை, ஒரே மொழி கொண்டு ஒரே பூகோளப் பிரதேசத்தில் குறைந்தது பல ஆயிரம்பேர் சேர்ந்து வாழவேண்டும். அங்கே நினைவுச் சின்னக் கட்டடங்களும், அரசியல் கட்டமைப்பும் இருக்கவேண்டும்.’
மேற்படி அறிஞர்கள் அளித்த விளக்கங்களை மட்டுமே வைத்து நாகரிகத்தைப் புரிந்துகொண்டுவிடமுடியாது என்று வேறு சிலர் வாதிட்டனர். நாகரிகம் என்பது என்ன என்பதற்குத் தெளிவான அளவுகோல்கள் தேவை என்பது இவர்கள் வாதம். வெறும் தத்துவார்த்த விளக்கங்களை மட்டும் வைத்துக்கொண்டு நாகரிகத்தை எடைபோடமுடியாது என்று அவர்கள் வேறு சில திட்டவட்டமான அளவுகோல்களை முன்வைக்க முனைந்தனர்.
1. மனிதகுலம் வேட்டையாடத் தொடங்கிய காலம்
வேட்டையாடத் தொடங்கியபிறகுதான், மனிதன் கல், வெண்கலம், இரும்பு என்று ஒவ்வோரு வகையான ஆயுதங்களைக் கண்டுபிடித்தான். இவற்றின் உதவியோடு விவசாயத்தில் இறங்கினான். உபரி உற்பத்தி மனிதன் பிறரோடு இணந்து வாழும் சமுதாய வாழ்க்கைக்கு அடிகோலியது. ஆட்சி முறை, சட்டத் திட்டங்கள், சமுதாய நெறிகள் ஆகியவை உருவாயின. ஆகவே, நாகரிகத்தின் தொடக்கப் புள்ளி வேட்டையாடுதல்தான்.
2. சமுதாய வாழ்க்கை
இதன் ஆதரவாளர்கள் கணிப்புப்படி, வேட்டையாடத் தொடங்கிய காலம்வரை பின்னோக்கிப் போக வேண்டியதில்லை. இந்த அணுகுமுறை நம்மைக் கற்காலத்துக்கே கூட்டிகொண்டுபோய்விடும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று மனித குலம் உணர்ந்த நாள்தான், நாகரிகத்தின் பிறப்பு. அப்போதுதான், மனிதர்கள் தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்தார்கள், அவன் வழி நடந்தார்கள். தொழில் அடிப்படையிலான சமுதாயப் பிரிவுகள் வந்தன. ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் தொழிலில் கவனத்தை ஒருமுகப்படுத்தினார்கள். விவசாயம், வீடு கட்டுதல், கைவினைப் பொருட்கள் செய்தல், வியாபாரம் எனப் பல துறைகளில் வளர்ச்சியும், முன்னேற்றமும் வந்தன. ஆகவே, நாகரிக வளர்ச்சியை எடைபோடச் சிறந்த அடையாளம், மனிதர்கள் எப்போது கூடி வாழத் தொடங்கினார்கள் என்பதுதான்.
3. நகர வாழ்க்கை
இவர்கள் போவது இன்னும் ஒரு படி முன்னால். நகரங்கள் வந்தபிறகுதான் நாகரிகம் வந்தது என்னும் இவர்கள் வாதம், லத்தீன் வார்த்தையான Civilis -ன் அடிப்படையிலானது.
4. எழுத்துவடிவ மொழி
சுமேரியாவில் கி.மு. 4000ல் க்யூனிபார்ம் என்னும் சித்திர எழுத்து வந்தது. கி.மு. 3500ல் எகிப்திலும், கி.மு. 1600ல் இஸ்ரேல், லெபனான் பகுதிகளிலும் அகரவரிசை எழுத்து மொழியும் நடைமுறைக்கு வந்தன. மனிதன் தன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள வழி வகுத்தது எழுத்து வடிவ மொழிதான், எனவே, எழுத்துவடிவ மொழிதான் நாகரிகத் தொடக்கம் என்பது இவர்கள் வாதம்.
இவை அனைத்தையும் அலசி ஆராய்ந்த கோர்டன் சைல்ட் (Gordon Childe) என்னும் இங்கிலாந்து நாட்டு வரலாற்று ஆசிரியர் பத்து அளவுகோல்களை முடிவு செய்தார். இவற்றின் அடிப்படையில்தான் நாகரிகங்களை அளக்கவும், ஒப்பிடவும் வேண்டும் என்று கூறினார். அவர் குறிப்பிடும் அம்சங்கள் இவைதாம்:
- நகரக் குடியிருப்புகள்
- தேர்ந்தெடுத்த சில தொழில்களில் தொழிலாளர்கள் வித்தகர்கள் ஆதல்
- தேவைக்கு அதிகமான உற்பத்தி
- வரையறுக்கப்பட்ட சமுதாயப் பிரிவுகள்
- அரசாங்க அமைப்பு
- பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான பெரிய கட்டடங்கள்
- தொலைதூர வாணிபம்
- கலைப் பொருட்கள்
- எழுத்துக்கள், இலக்கியம்
- கணிதம், வடிவியல் (Geometry) வானியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி.
அது சரி, ஒரு நாகரிகம் இந்த வரைமுறைகளுக்கு உட்படுகிறதா என்று எப்படி மதிப்பீடு செய்வது? இதற்குப் பயன்படும் முக்கிய முறை அகழ்வாராய்ச்சி. உடைந்த மண்சட்டி, உருக் குலைந்த கட்டடங்கள், புதைந்திருக்கும் மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகள், கல் பொறிப்புக்கள், பழைய லிபி எழுத்துகள் என ஒவ்வொரு புள்ளியாகத் தேட வேண்டும். இந்த ஆதாரங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்று துல்லியமாகக் கணிக்கும் அறிவியல் சோதனை முறைகள் பல உள்ளன.
கோர்டன் சைல்டின் அளவுகோல்கள். அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், ஏழு பழங்கால நாகரிகங்களை முதிர்ச்சி பெற்றவைகளாகச் சொல்லலாம். அவை:
- சுமேரியன் நாகரிகம் ( கி.மு 5500 – கி.மு. 2334 )
- சீன நாகரிகம் ( கி.மு 5000 – கி.மு. 1912 )
- எகிப்தியன் நாகரிகம் ( கி.மு 3150 – கி.மு. 332 )
- சிந்து சமவெளி நாகரிகம் ( கி.மு 2500 – கி.மு. 1700 )
- கிரேக்க நாகரிகம் ( கி.மு 2500 – கி.மு. 323 )
- மாயன் நாகரிகம் ( கி.மு 2000 – கி.மு. 900 )
- ரோமன் நாகரிகம் ( கி.மு 753 – கி.பி. 476 )
இந்தப் பழங்கால நாகரிகங்கள் ஒவ்வொன்றையும் இனி விரிவாகப் பார்ப்போம்.
முதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் மற்ற எல்லா உயிரினங்களையும்போல வயிற்றுப் பசியும், உடல் பசியும்தான் இருந்திருக்கும். இயற்கையில் கிடைக்கும் காய்களை, பழங்களைப் பச்சையாகச் சாப்பிட்டார்கள். பிற மிருகங்கள் தங்களைத் தாக்க வந்தால் ஓடித் தப்பினார்கள் அல்லது கைகளால் சண்டை போட்டார்கள் கைகள் மட்டுமே அவர்களின் கருவிகள், ஆயுதங்கள்.
சோம்பேறித் தனமும், ஆசைகளும்தாம் மனித முன்னேற்றத்தின் உந்துசக்திகள். காய்களையும், பழங்களையும் பறிக்க மரங்களில் ஏறவேண்டியிருந்தது. அதற்குப் பதிலாகக் கல்லை வீசி எறிந்தால், காயும் பழமும் கைகளில் வந்து விழுமே? மலைகளின் பெரிய பாறைகளை உடைத்துச் சிறு கற்களாக்கினான்.
ஒரு மனிதன் காட்டில் நடந்துகொண்டிருந்தான். ஒரு முயல்குட்டி அப்போதுதான் இறந்துபோயிருந்தது. அவனுக்கு அகோரப் பசி. சாப்பிட்டான். அந்த ருசி அவனுக்குப் பிடித்தது. தன் பெண் துணையிடம் கொடுத்தான். அவள் ரசித்துச் சாப்பிட்டாள். படைப்பின் அடிப்படையே இனக் கவர்ச்சிதானே? பெண்ணைத் திருப்திப்படுத்த, மிருகங்கள், பறவைகளின் சடலங்கள் தேடி அலைந்தான்.
அவனுக்குள் ஒரு பொறி – இப்படி ஏன் அலைந்து திரிந்து, உடல்கள் கிடைக்குமா என்று திண்டாடவேண்டும்? ஏதாவது கருவிகள் இருந்தால், மிருகங்கள், பறவைகளை வேட்டையாடிக் கொன்று, வேண்டும்போதெல்லாம் சாப்பிடலாமே? அவனுக்குத் தெரிந்த ஒரே மூலப்பொருள் கல்தான். மலைப் பிஞ்சுகளால் கருவிகள் செய்தான். இப்போது இன்னொரு பொறி, பிற மிருகங்களோடு ஏன் வெறும் கைகளால் மட்டுமே சண்டை போடவேண்டும்? கல்லால் ஆயுதங்கள் செய்துகொண்டான்.
இந்தக் காலகட்டத்தில், மனிதன் தன் உணவு, பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்திசெய்யப் பயன்படுத்தியவை தன் கைகள், கல்லால் ஆன கருவிகள், ஆயுதங்கள். எனவே, இந்தக் காலகட்டம் Palaeolithic Age என்று அகழ்வாராய்ச்சி நிபுணர்களாலும் கற்காலம் (Stone Age) என்று ஜனரஞ்சகமாகவும் அழைக்கப்படுகிறது. கி.மு. 2000000 வாக்கில் கற்காலம் தொடங்கியிருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது.
சுமார் 10,000 ஆண்டுகள் ஓடின. சுமார் கி.மு. 10,000. மனித வாழ்வில் முக்கியத் திருப்பம். இதுவரை, காய்கள், பழங்களைப் பறித்தும், பறவைகள், விலங்குகளை வேட்டையாடியும் வாழ்ந்த மனிதன் உணவுவகைகளைப் பயிரிடத் தொடங்கினான். விவசாயம் ஆரம்பித்தது. பலவிதக் கருவிகள் படைக்கப்படுவதற்கு விவசாயம்தான் வித்திட்டது. கை சக்தியை மட்டுமே நம்பிப் பயிரிடத் தொடங்கியவன், கருவிகள் உதவியால், தன் குடும்பத் தேவைகளுக்கும்
அதிகமாக உற்பத்தி செய்தான். மெள்ள மெள்ள, இந்த உபரித் தயாரிப்பைப் பிறருக்குக்கொடுத்தான். பண்டமாற்றுமுறை தொடங்கியது, வியாபாரமாக வளர்ந்தது.
அடுத்ததாக வந்தது வெண்கலக் காலம் (Bronze Age). செம்பு, அதன் உலோகக் கலவையான வெண்கலம் ஆகியவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்கள், கருவிகள், ஆயுதங்கள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை மனித இனம் பயன்படுத்திய நாட்கள். செம்பு தயாரிக்கவும், உருக்கவும், அதைப் பிற உலோகங்களோடு சேர்த்துக் கலவைகள் தயாரிக்கவும் அவர்கள் தெரிந்துகொண்டிருந்தார்கள்.
கி.மு. 3800 – இல் தொடங்கியதாகக் கணக்கிடப்படும் வெண்கலக் காலம் மனித வாழ்க்கை முன்னேற்றத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. உலோகங்களைப் பயன்படுத்தப் பலதுறை அறிவு வேண்டும் – தாதுப் பொருட்களைக் கண்டுபிடித்து அவற்றை வெட்டி எடுக்கவேண்டும், அவற்றை உருக்கவேண்டும், அவற்றிலிருந்து பொருட்கள் தயாரிக்கவேண்டும். இவற்றிற்கெல்லாம் ஏராளமான தொழிலாளிகளும், கைவினை வல்லுநர்களும் தேவை.
(கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் ஆகியவற்றிற்கு இங்கே சொல்லப்படும் வருடங்கள் பொதுவானவை. பூகோளப் பகுதிகளுக்கு ஏற்ப இவை மாறுபடும்.)
இந்தப் பட்டியலில், மூன்றாவதாக, இறுதியாக வருகிறது இரும்புக் காலம் (Iron Age). கி.மு. 1200 -த்தில் தொடங்கிய இந்த நாட்களில் இரும்பும், உருக்கும் புழக்கத்துக்கு வந்தன. இரும்புக் காலம், வெண்கலக் காலத்தை புறம் தள்ளிவிட்டு, அதன் இடத்தைப் பிடிக்கவில்லை, இரண்டும் ஒருசேர இணைந்து இயங்கின.
இவறுக்கு நடுவே, மனிதர்களின் வாழ்க்கை முறைகளில் ஏராளமான மாற்றங்கள். ஆண் பெண்ணாக வாழ்வைத் தொடங்கியவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தன. காடுகளில் அலைந்து திரிந்த அவர்கள், கொளுத்தும் வெயில், கொட்டும் மழை, கொடிய மிருகங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புத் தேடினார்கள்.
ஒவ்வொரு மனிதனும், தன் குடும்பத்துக்குத் தேவையான உணவுவகைகளைப் பயிரிடத் தொடங்கினான். தன் இருப்பிடத்தை அவனே கட்டிக்கொண்டான். முதலில், தனித் தனியான தீவுகளாக வாழ்ந்தார்கள். விரைவிலேயே, சேர்ந்து இருந்தால் பாதுகாப்பு அதிகம் என்று உணர்ந்தார்கள். அருகருகே வீடுகள் கட்டிக்கொண்டார்கள்.
ஒவ்வொரு குடும்பத்தின் தேவைகளும் விரிவடைந்துகொண்டிருந்தன. தன்னுடைய எல்லாத் தேவைகளையும், தங்கள் குடும்ப அங்கத்தினர்கள் உழைப்பால் மட்டுமே பூர்த்திசெய்ய முடியாது, தான் பக்கத்து வீட்டுக்காரனுடைய சில அவசியங்களை நிறைவேற்றினால், தன்னுடைய சில தேவைகளை அவன் திருப்தி செய்வான் என்பதைத் தெர்ந்துகொண்டார்கள். ஒத்துழைப்பும், இணைந்து வாழ்தலும் தொடங்கின. தனிமரங்கள் தோப்பாயின, சமுதாய வாழ்க்கை ஆரம்பித்தது.
இந்தப் பயணத்தின் பல முக்கிய மைல்கற்கள் இதோ:
( கி.மு. காலத்தின் முக்கிய நிகழ்வுகள் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளன. இது முழுமைப் பட்டியல் அல்ல. ஒவ்வொரு நாகரிகத்தையும் ஆராயும்போது, முழுமையாகப் பார்ப்போம்.)
கி.மு. 10500 – சிரியா, லெபனான் பகுதிகளில் விவசாயம்.
கி.மு. 7000 – இராக், சிரியா, துருக்கி பகுதிகளில் மண்பாண்டங்கள் – ஆடு மாடுகள் வளர்த்தல் – ஆப்பிரிக்கா.
கி.மு. 6200 – துருக்கியில் செம்பு உருக்குதல் – தெற்கு ஆசியாவில் பருத்தி பயிரிடல்.
கி.மு. 5500 – இரான், இராக் பகுதிகளில் நீர்ப்பாசனம்.
கி.மு. 5000 – சீனாவில் பட்டுப் புழு வளர்ப்பு, பட்டுத் தொழில்.
கி.மு. 4500 – இஸ்ரேல், லெபனான், ஜோர்டான், சிரியா, துருக்கி ஆகிய பகுதிகளில் விவசாயத்தில் கலப்பை உபயோகித்தல்.
கி.மு. 4300 – ஐரோப்பாவில் கல்லறைகள்.
கி.மு. 4000 – இந்து சமவெளியில் ஆடு, மாடுகள் வீட்டுப் பிராணிகளாக வளர்ப்பு – ஐரோப்பாவில் ஆடு மாடுகளோடு குதிரைகளையும் வீட்டுப் பிராணிகளாக வளர்க்கும் பழக்கம் – க்யூனிஃபார்ம் என்னும் எழுத்துவடிவ சுமேரிய மொழி-
கி.மு. 3800 – சுமேரியாவில் வெண்கலம் தயாரிப்பு.
கி.மு. 3500 – சுமேரியாவில் நகர வாழ்க்கை – எகிப்தின் நகரங்கள், அரசாட்சி முறை
கி.மு.3000 – மொகஞ்சதாரோவில் செங்கலால் கட்டப்பட்ட 12 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும், 2.4 மீட்டர் ஆழமும் கொண்ட பிரம்மாண்டக் குளியல் இடம்.
கி.மு. 2630 – எகிப்து பிரமிட்கள்.
கி.மு. 2600 – எகிப்தில் கோதுமை ரொட்டி தயாரிப்பு.
கி.மு.2350 – சுமேரியா, இந்து சமவெளி மக்களிடையே வியாபாரத் தொடர்புகள்.
கி.மு.2100 – சுமேரியாவின் Ziggurats எனப்படும் செங்கல்களால் கோட்டைகள்போல் கட்டப்பட்ட கோவில்கள்.
கி.மு. 1772 – சுமேரியா- ஹமுராபி அரசர் அமுல்படுத்திய சட்டங்களின் தொகுப்பு. (Hamurabi Code)
கி.மு. 1700 – சுமேரியா- குதிரைகள் இழுக்கும் வண்டிகள், தேர்கள்.
கி.மு. 1600 – இஸ்ரேல், லெபனான் பகுதிகளில் அகர வரிசை முறை (Alphabets).
கி.மு.1500 – துருக்கி. இரும்பு தயாரிப்பு.
கி.மு.776 — கிரேக்கத்தில் முதல் ஒலிம்பிக் போட்டிகள்.
கி.மு. 753 – மக்களவை, மேலவை என இரண்டு படிநிலைகளில் இருந்த ரோமாபுரியின் அரசியல் கட்டமைப்பு.
கி.மு.700 – பாபிலோனியன் ஜோதிடர்கள் ராசி மண்டலம் (Zodiac Signs) கண்டுபிடிக்கிறார்கள். துருக்கி மற்றும் அண்டைப் பகுதிகளில் நாணயம் – அமெரிக்காவில், செவ்விந்தியர் (மாயர்கள்) வசிக்கும் பகுதிகளில் படங்களை அடிப்படையாகக் கொண்ட சித்திர எழுத்து (Hieroglyph) –அகரவரிசை புழக்கத்துக்கு வருகிறது.
கி.மு.600 – உலக அதிசயங்களில் ஒன்றான பாபிலோன் தொங்கும் தோட்டங்கள் உருவாக்கம்.
கி.மு.580 – கி.மு. 500 – a2 + b2 = c2 என்னும் செங்கோண முக்கோணங்கள் பற்றிய தேற்றம் கண்டுபிடித்த கிரேக்கக் கணித மேதை பிதகோரஸ் வாழ்ந்த காலம்.
கி.மு.469 — கி.மு. 399 – கிரேக்கத் தத்துவ மேதை சாக்ரட்டீஸ் வாழந்த காலம்.
கி.மு.460 — கி.மு. 370 – நோய்கள் கடவுள்கள் உருவாக்குவதல்ல, சுற்றுச் சூழல்களால் வருகிறது என்று சொன்ன உலக மருத்துவத் தந்தை ஹிப்போகிரட்ஸ் கிரேக்கத்தில் வாழ்ந்த காலம்.
கி.மு. 450 – உலக நீதிமுறைகளுக்கு வழிகாட்டும் ரோமானியரின் Twelve Tables என்னும் சட்டமுறை.
கி.மு.400 – மாயர்களின் காலண்டர்.
கி.மு. 366 – சீனாவின் குகைக் கோவில்கள்.
கி.மு.300 – அரசர்கள், பிரபுக்கள், பூசாரிகள் என அதிகாரம் வரையறுக்கப்பட்ட மாயன் ஆட்சிமுறை.
கி.மு. 214 – உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெரும் சுவர் உருவாக்கம்.
கற்காலத்தில் முதல் அடி எடுத்துவைத்த நாம், இத்தனை சாதனைகளையும் தாண்டி, இன்று கம்ப்யூட்டர் யுகத்துக்கு வந்துவிட்டோம். இன்டர்நெட்டையும், இணையதளத்தையும் இருபது வருடங்களுக்கு முன் நினைத்தே பார்த்திருக்கமாட்டோம். இன்றோ, இவை இல்லாத வாழ்க்கையைக் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா? நாளை எந்தப் புதிய தொழில்நுட்பம் வரும், நம் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் என்று கணிக்கவே முடியவில்லை. நாகரிக வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.
விஞ்ஞானம் சொல்லும் பிரபஞ்ச ரகசியம்
பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதற்கு, பல்லாண்டுகால ஆராய்ச்சிகளின் அடிப்படையில், நாம் இன்று ஏற்றுக்கொண்டுள்ள அறிவியல் கொள்கை பெருவெடிப்புக் கோட்பாடு (Big Bang Theory).
உங்களைச் சுற்றி இருக்கும் உலகத்தை, வானத்தை, நட்சத்திரங்களை, வெட்ட வெளியை ஒருமுறை நன்றாகக் கவனியுங்கள். பார்த்துவிட்டீர்களா? இப்போது கண்களை மூடுங்கள். திறங்கள். இந்தக் ‘கண் சிமிட்டும் நேரம்’ சுமார் ஆறு விநாடிகள்.
இப்போது மறுபடியும், உலகத்தை, வானத்தை, நட்சத்திரங்களை, வெட்டவெளியை உற்றுக் கவனியுங்கள். வித்தியாசம் தெரிகிறதா? என்ன, ஒரு வேற்றுமையும் தெரியவில்லையா? நீங்கள் கண் மூடும் முன் பார்த்த பிரபஞ்சத்தைவிட, கண் திறந்தபின் பார்த்த சர்வலோகம் மிக மிகப் பெரியது. ஆமாம், ஒவ்வொரு விநாடித் துகளிலும், பிரபஞ்சம் பேரளவில் வளர்ந்து கொண்டிருக்கிறது, அதன் எல்லைக் கோடுகள் விரிவடைந்துகொண்டேயிருக்கின்றன. பிரபஞ்சத்தின் இந்தத் தொடர் வளர்ச்சிதான் பெருவெடிப்புக் கோட்பாட்டின் அடிப்படைத் தத்துவம்.
பெல்ஜிய நாட்டில் ஜார்ஜஸ் லெமட்ரே (Georges Lemaître) என்னும் கத்தோலிக்கப் பாதிரியார் இருந்தார். வேதாகமத்தில் மட்டுமல்ல, கணிதம், பௌதீகம், வானியல் ஆகிய துறைகளில் உயர் கல்வி பெற்றவர். பெல்ஜியப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். அவர் உள்ளம் கணித வானியலில் லயித்தது. அமெரிக்கா சென்று ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் வான் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றினார். இதைத் தொடர்ந்து, அமெரிக்க எம்.ஐ.டி – இல் இயற்பியல் ஆராய்ச்சி, இரண்டாவது டாக்டர் பட்டம்.
அதுவரை, பிரபஞ்சம் வளர்ச்சி முற்றுப் பெற்றுவிட்ட பூகோள அமைப்பு என்று எல்லோரும் நினைத்தார்கள். 1931 – இல் லெமட்ரே, A homogeneous Universe of constant mass and growing radius accounting for the radial velocity of extragalactic nebulae என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார்.
பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டேயிருக்கிறது என்னும் புரட்சிகரமான கருத்தைக் கணித முறைகள் மூலமாக நிரூபித்தார். அறிவியல் உலகம் இந்தக் கருத்தை ஏற்கவில்லை, கேலி செய்தது. அறிவியல் மேதை ஐன்ஸ்டின், லெமட்ரே இருவரும் ஒரு கருத்தரங்கில் சந்தித்தார்கள். அப்போது ஐன்ஸ்டின் என்ன சொன்னார் தெரியுமா, ‘உங்கள் கணிப்பீடுகள் சரிதான், ஆனால், உங்கள் இயற்பியல் அறிவு வெறுக்கும்படியாக இருக்கிறது.’
அதே சமயம், எட்வர்ட் ஹபிள் (Edward Hubble) என்னும் அமெரிக்க வானியல் அறிஞரும் இதே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அவருடைய அணுகுமுறை கணிப்பீடு அல்ல, பரிசோதனைகள். டெலஸ்கோப்கள் மூலமாகப் பால் மண்டல (மில்கி வே) நட்சத்திரங்களின் போக்குகளைக் கவனித்துக்கொண்டிருந்த அவருக்கு, விண்மீன் மண்டலங்கள் விரிவடைந்துகொண்டே போவது சந்தேகமில்லாமல் நிரூபணமானது. தன் கண்டுபிடிப்பை Hubble Sequence என்னும் கொள்கையாக 1929 – இல் வெளியிட்டார்.
லெமட்ரே கணிப்பு + ஹபிள் பரிசோதனை, சர்வலோகம் வளர்கிறது என்பதை அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டது. இந்த அடிப்படையில், கணக்கீடுகள், பரிசோதனைகள், ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. பெருவெடிப்புக் கோட்பாடு பிறந்தது. இந்தக் கொள்கை என்ன சொல்கிறது?
1380* கோடி வருடங்களுக்கு முன்னால், சில மி.மீ அளவில் கூழாங்கல்போல் ஒரு தீப்பிழம்பு எப்படியோ தோன்றியது. அது திடீரெனப் பல துண்டுகளாக வெடித்தது. இதுதான் பெருவெடிப்பு. துண்டுகள் அத்தனையும் நெருப்பாய்த் தகித்தன. பல நூறு கோடி வருடங்கள் ஓடின. துண்டுகள் குளிர்வடைந்தன.
(* சரியாகச் சொல்ல வேண்டுமானால், 1379. 90 + / – 3.70 வருடங்கள். 508
உயிரின வகை தொடக்கம்).
இந்தத் துண்டுகளிலிருந்து முதலில், எலெக்ட்ரான், ப்ரோட்டான், நியூட்ரான் என்னும் அணுவை உருவாக்கும் துகள்கள் (Subatomic particles) வந்தன: இத்துகள்களின் அடுத்த அவதாரம், ஹைட்ரஜன், ஹீலியம், லித்தியம் ஆகிய வாயுக்கள். இவை குளிர்ந்து, சூரியன், சந்திரன், கிரகங்கள், பூவுலகம், நட்சத்திரங்கள் எனப் பல வடிவெடுத்தன. ஒவ்வொரு அவதாரத்துக்குமிடையே பல நூறு கோடி வருடங்கள்! பிரபஞ்சம் பிறந்தது. பெருவெடிப்பு தொடங்கிவைத்த கைங்கரியத்தால்தான், பேரண்டம் தொடர்ந்து பே…ர….ண்…ட…மாகிக்கொண்டே வருகிறது.
பிரபஞ்சம் படைத்தது கடவுள் அல்ல, அது தானாகவே உருவானது என்று பெருவெடிப்புக் கோட்பாடு அடிப்படையில் பகுத்தறிவாளர்கள் வாதிடுகிறார்கள். இவர்களிடம் மதவாதிகள் கேட்கும் கேள்வி: ‘எல்லாவற்றுக்கும் ஆரம்பம், அந்தக் கூழாங்கல் சைஸ் தீப்பிழம்புதானே? அதை முழுமுதற் கடவுள் படைத்தார் என்று நாங்கள் நம்புகிறோம். இல்லை என்கிறீர்களா? அப்படியென்றால், அது எப்படி வந்தது? சொல்லுங்கள் பார்க்கலாம்?’
விஞ்ஞானிகளிடம் இந்த சவாலுக்கு பதில் கிடையாது. பிரபஞ்சம் எப்படிப் படைக்கப்பட்டது என்று சொல்லும் இந்தியா, ஃபின்லாந்து, சீனா, கிரேக்கம், எகிப்து, நியூசிலாந்து நாடுகளின் இதிகாசக் கதைகளை மனக்கண்ணில் ஓட்டுங்கள். தொடக்கப் புள்ளியான தீப்பிழம்பு விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் இரண்டிலும் பொதுவானதாக இருக்கிறது. ஆகவே, இதிகாசங்கள் சொல்வது முழுக் கற்பனையல்ல.
ஆனால், ஜீவராசிகளும், மனிதர்களும் எப்படிப் படைக்கப்பட்டார்கள் என்பதில், அறிவியல், இதிகாசக் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. இந்தப் புதிய பாதை போட்டவர் இங்கிலாந்தின் அறிவியல் மேதை சார்ல்ஸ் டார்வின். இந்தக் கொள்கை – பரிணாமக் கொள்கை. 1859 ல் வெளியானOn the Origin of Species 1871 ல் வெளியான The Descent of Man ஆகிய புத்தகங்கள் டார்வினின் பரிணாமக் கொள்கையை ஆதாரங்களோடு நிரூபித்தன.
எல்லாவகையான ஜீவராசிகளும் எப்படி உருவாயின என்கிற கொள்கை டார்வினுக்கு முன், டார்வினுக்குப் பின் என்று இரண்டு காலகட்டங்களாகப் பிரிக்கப்படவேண்டிய சித்தாந்தம்.
பிரம்மா உயிரினங்களை எப்படிப் படைத்தார்? தன் உடலின் ஒவ்வொரு வயவங்களிலிருந்தும் ஒவ்வொரு விதமான ஜீவராசியை உருவாக்கினார். முதலில் புல், அடுத்து பூக்கள், மரங்கள், பூச்சிகள், பறவைகள், மீன்கள் ஜனனமாகின்றன. கடைசியாக ஒரு ஆண், ஒரு பெண்.
இது உண்மையில்லை, உயிரினங்கள் படிப்படியாக உருவாயின என்கிறார் டார்வின். சுமார் 210 கோடி வருடங்களுக்கு முன்னால் தொடங்கிய இந்த வரலாற்றின் சில முக்கிய மைல்கற்களைப் பார்ப்போம்:
- மரம், மிருகம் ஆகியவற்றின் மையக்கரு கொண்ட அணு (Cells with nucleus) : 210 கோடி வருடங்கள் முன்னால்.
- முதுகெலும்புள்ள விலங்குகள் (மீன்கள், பல்லி, பாம்பு போன்ற ஊரும் பிராணிகள்) பறவைகள் – Vertebrates : 50.5 கோடி வருடங்களுக்கு முன்னால்.
- குட்டியிட்டுப் பாலூட்டும் விலங்குகள் (Mammals) : 22 கோடி வருடங்களுக்கு முன்னால்
- முயல்கள், எலிகள், அணில்கள் (Supraprimates) : 10 கோடி வருடங்களுக்கு முன்னால்
- குரங்குகள் : 3 கோடி வருடங்களுக்கு முன்னால்.
- மனிதக் குரங்குகள் (வாலுள்ள கொரிக்கலாக்கள். வால் இல்லாத சிம்பன்ஸிகள்) : 1.50 கோடி வருடங்களுக்கு முன்னால்.
- மனிதர்கள் : 5 லட்சம் வருடங்களுக்கு முன்னால்
விண்மண்டலம், பூவுலகம், மரம், செடி கொடிகள். ஜீவராசிகள், ஆண், பெண் ஆகிய எல்லாம் ரெடி. இனி மனித வாழ்க்கை தொடங்குகிறது.
முட்டைக்குள்ளிருந்து பிரபஞ்சம் பிறந்த கதைகளைப் பார்த்தோம். கிரேக்கம், எகிப்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் புராதனக் கதைகள் ஆண் – பெண் தேவதைகளின் சேர்க்கையால் பிரபஞ்சம் பிறந்ததாகச் சொல்கின்றன.
கிரேக்கம்
கிரேக்கம் சொல்லும் கதை இது. முதலில் எங்கும் வெட்ட வெளி. அதைச் சுற்றிப் பெருவெள்ளம். அந்த வெள்ளத்தில் வாழ்ந்தாள் ஓஷனஸ் (Oceanus) என்னும் கடல் தேவதை. அவளுக்கும், வடக்குக் காற்றுக்கும் காதல் வந்தது. இணந்தார்கள். ஈரினோம் (Eurynome) என்னும் பெண் குழந்தை பிறந்தது. ஈரினோம் காதல் கடவுள். தன் ஆசை மகளுக்காக ஓஷனஸ் பேரலைகளை உருவாக்கினாள். ஈரினோம் அவற்றின்மேல் ஏறி விளையாடினாள். அந்த ஆட்டத்தில் விண்ணுலகம், மண்ணுலகம், வானம், கடல், மிருகங்கள், பறவைகள், நீர்வாழ் இனங்கள் ஆகியவை பிறந்தன.
எகிப்து
எகிப்தியப் பழங்கதைகள் என்ன சொல்கின்றன? எங்கும் தண்ணீர். அங்கே ஆண் – பெண் ஜோடிகளாக எட்டுக் கடவுள்கள். இவர்கள் சேர்க்கை, முதலில் சூரியனையும் அடுத்து, பிற உயிரினங்களையும் படைக்கிறது.
ரோம்
கேலஸ் (Caelus) ரோமர்களின் வானக் கடவுள். அவருக்கும், உலகத்தின் கடவுள் கெயாவுக்கும் (Gaia) நெருக்கம் ஏற்படுகிறது. பிரபஞ்சத்தில் இருப்பவை அனைத்தும் இந்த ஜோடிகளின் வாரிசுகள்.
இந்தியா
இனி, முழுமுதற் கடவுள் பிரபஞ்சத்தை சிருஷ்டித்த கதைகளைப் பார்ப்போமா? சிவபெருமான் முட்டை மூலமாக பிரம்மாவைப் படைத்து, சிருஷ்டியைத் தொடங்கிவைத்ததைப் பார்த்தோம். இன்னொரு கதையில், முட்டை இல்லை. சிவபெருமான் தன் இடப்புறத்தை வருடுகிறார். விஷ்ணு அவதரிக்கிறார். அவர் காக்கும் கடவுள். அதுசரி, பிரபஞ்சமே இல்லையே, யாருமே இல்லையே, விஷ்ணு யாரைக் காப்பாற்றப் போகிறார்? என்றால், காக்கும் வேலை தொடங்கும் முன், ஒரு படைப்பு வேலையை சிவன் விஷ்ணுவுக்குக் கொடுத்திருக்கிறார். விஷ்ணு படைக்கவேண்டியது அந்தப் படைப்புக் கடவுளையே!
சிவபெருமானின் அடுத்த லீலை ஊழிப் பிரளயம். விஷ்ணு வெள்ளத்தில் மிதக்கிறார். ஆதிசேஷன் என்னும் பாம்பு அவருக்குப் படுக்கையாக விரிகிறது. பெருமாள் இப்போது வெள்ளத்தில், ஆதிசேஷன்மேல் ஆனந்தமான அனந்த சயனத்தில். அவர் நாபி திறக்கிறது, அதிலிருந்து ஆயிரம் இதழ்களோடு தெய்வீகத் தாமரை மலர் விரிகிறது. வெளியே வருகிறார் படைப்புக் கடவுள் பிரம்மா!
வெள்ளம் வடிகிறது. பிரம்மா தன் கடமையைத் தொடங்குகிறார். தாமரை மலரில் மூன்று இதழ்களைப் பிய்க்கிறார். முதல் இதழை மேலே வீசுகிறார்: சொர்க்கலோகம் பிறக்கிறது. இரண்டாம் இதழை பிரம்மா வீசுகிறார். பரந்த நீலவானம் படர்கிறது. இப்போது மூன்றாம் இதழைக் கீழே நழுவவிடுகிறார். உலகம், நம் உலகம் பிறக்கிறது.
நியூசிலாந்து
வெட்ட வெளியில், முழுமுதற் கடவுள் மட்டுமே இருக்கிறார். ரங்கினுயி (Ranginui) என்னும் வானக் கடவுள், பாப்பாட்டுவானுக்கு (Papatuanuku) என்னும் பூமித்தாய். இவர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு ஏராளமான குழந்தைகள் பிறக்கின்றன. இந்த வம்சாவளிப் பெருக்கம்தான் நம் பிரபஞ்சம்.
பைபிள்
பைபிள்படி, நம் பிரபஞ்சம் முழுமுதற் கடவுளால் படைக்கப்பட்டது. அவர் ஆறு நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிருஷ்டி செய்தார்.
முதல் நாள்: வெளிச்சம் படைத்தார். அதை இருட்டிலிருந்து பிரித்தார். வெளிச்சத்தை நாள் என்றும், இருட்டை இரவு என்றும் அழைத்தார். இரண்டாம் நாள்: வானத்தை உருவாக்கினார். மூன்றாம் நாள்: பூமி, கடல்கள், மரங்கள், செடி கொடிகள். நான்காம் நாள்: சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள். ஐந்தாம் நாள்: மீன்கள் போன்ற நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள்.
(கடவுளின் நாள் நம்முடைய இன்றைய 24 மணிநேர நாள் அல்ல. ஏனென்றால், இதிகாசங்களின்படி, மத நம்பிக்கைகளின்படி, கடவுள் நம்முடைய காலக் கணக்குகளைத்
தாண்டியவர். உதாரணமாக, இந்து மத நம்பிக்கைகளின்படி, படைப்புக் கடவுள் பிரம்மாவின் ஒரு நாள் என்பது 864 கோடி வருடங்கள். பைபிள் சொல்லும் நாள் கணக்கையும், இந்த அடிப்படையில்தான் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.)
ஆறாம் நாள்: வகை வகையாய் மிருகங்கள். இதுவரை செய்த படைப்புகளின் உச்சமாயக ஆதாம், ஏவாள் முதல் ஆண், பெண்! ஏழாம் நாள்: தன் பணியைக் கச்சிதமாகச் செய்து முடித்த கடவுள் ஓய்வு எடுத்துக்கொண்டார்.
பைபிள் சொல்லும் இன்னொரு சிருஷ்டி ரகசியக் கதை நோவாவின் மரக்கலம்.
இந்துமத சிவபெருமானைப் போலவே, பைபிள் காட்டும் முழுமுதற் கடவுளின் வேலையும், அழிப்பதும், மறுபடி படைப்பைத் தொடங்குவதும்தாம். பிரபஞ்சத்தில் அதர்மம் பெருகிவிட்டது. கெட்டனவற்றை அழித்து, நல்லன காக்க ஆண்டவன் முடிவெடுத்துவிட்டார். நோவா என்னும் தர்மத்தின் தலைவனை அழைக்கிறார். அவனை ஒரு மரக்கலம் தயரிக்கச் சொல்கிறார். நீளம், அகலம், உயரம், உள் வெளி அமைப்பு, பயன்படுத்தவேண்டிய மரம் என அவன் பின்பற்றவேண்டிய அத்தனை வடிவமைப்பு விவரங்களையும் தருகிறார். மரக்கலம் தயார்.
கடவுளின் அடுத்த கட்டளை – பிரபஞ்சத்தில் இருக்கும் எல்ல வகை ஜீவராசிகளிலும், ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு உயிரினங்களை கொண்டு வா. அவர்கள் எல்லோரையும் மரக்கலத்தில் பத்திரமாகத் தங்க வை.
சுமார் 45,000 வகை உயிரினங்கள் இப்போது மரக்கலத்தில் அடைக்கலம்.
அடுத்த கட்டளை – மரக்கலத்தில் இருக்கும் உயிரினங்களுக்குப் பல மாதங்கள் தேவையான உணவுப் பொருட்களைக் கொண்டு வா.
கடைசிக் கட்டளை – நீயும் மரக்கலத்தில் ஏறு. உள்ளே உட்கார்ந்துகொள். என்ன நடந்தாலும் பயப்படாதே. உங்கள் எல்லோரையும் காப்பாற்ற நான் இருக்கிறேன். நான் வெளியே வரச்சொல்லும்போது மட்டுமே, நீயும் உன்னோடு இருக்கும் ஜீவராசிகளும் வெளியே வரவேண்டும்.
நோவா மரக்கலத்தின் உள்ளே போனான். வெளியே, அண்டசராசரமே அதிரும் ஒலியோடு இடி. கண்பார்வையைப் பறித்திவிடும் பளிச் மின்னல். ஆனால், மரக்கலம் அமைதியின் உறைவிடமாக இருந்தது. நாற்பது நாட்கள் தொடர்ந்து மழை கொட்டியது. அடுத்த நூறு நாட்கள் ஊழி வெள்ளம். உலகம் மூழ்கியது. அங்கே வாழ்ந்த அத்தனை உயிரினங்களும் அழிந்தன.
வெள்ளத்தால் அடிக்கப்பட்ட மரக்கலம், அராரத் (Ararat) என்னும் மலையருகே ஒதுங்கியது. மழை நின்றது. ஒரு வருடத்துக்குப் பிறகு வெள்ளம் வடிந்தது. நோவாவையும், அவனோடு இருந்த அத்தனை உயிர்களையும் ஆண்டவன் வெளியே வரச் சொன்னார். தர்ம பூமியாக, நல்லவர்கள் வாழும் இடமாக, மறுபடியும் உலகம் தன் சுழற்சியைத் தொடங்கியது.
குர் ஆன்
தொடக்கத்தில் வானமும், பூமியும் சேர்ந்து ஒரே அமைப்பாக இருந்தன. அல்லா ஆணையின்படி, இவை இரண்டாகப் பிரிந்தன: ஆனால், ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வாழ சம்மதித்தன. சொர்க்கம், உலகம், இவற்றுக்கு நடுவே இருப்பவை என அனைத்தையும் அல்லா படைத்தார். இந்தப் படைப்புக்கு அல்லா ஆறு நாட்கள் எடுத்துக்கொண்டார் என்று சில குறிப்புகள் சொல்கின்றன. இல்லை, உலகத்துக்கு இரண்டு நாட்கள், மலைகள், ஜீவராசிகள் ஆகியவற்றுக்கு நான்கு நாட்கள், வனம், சொர்க்கம் ஆகியவற்றுக்கு இரண்டு நாட்கள் என்று மொத்தம் எட்டு நாட்கள் என்கின்றன பிற சில குறிப்புகள்.
இந்தப் பழங்கதைகள் வெறும் கட்டுக்கதைகள் என்று பலர் நினைக்கிறோம். இந்தக் கதைகள் , பல்லாயிரம் மைல்கள் தூரத்தில் இருந்த எகிப்து, கிரேக்கம், ரோம், சீனா, நியூசிலாந்து, இந்தியா
போன்ற நாடுகளில் உருவானவை. பல்வேறு காலகட்டங்களின் கர்ணபரம்பரைக் கதைகள். அறிவியலும், தகவல் தொடர்புகளும், விண்வெளி ஆராய்ச்சிகளும், இருந்திருக்கவே முடியாது என்று நாம் நம்புகிற காலங்களின் கதைகள். ஆனால், ஒரு ஆச்சரியம், இந்தக் கதைகளுக்குள் பல பொதுத் தன்மைகள் இருக்கின்றன:
- பிரபஞ்சத்தைப் படைத்த முழுமுதல் சக்தி நெருப்பாய்த் தகிக்கும் ஒரு சக்தி.
- பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னால், அற்புதமான ஒரு ஒலி (ஓம் ) எங்கும் நிறைந்திருந்தது.
- சிருஷ்டியின் தொடக்கம் ஊழிப் பெருவெள்ளம்.
- பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனையும், அந்த முழுமுதல் சக்தியிலிருந்து தோன்றியவை. ஆகவே, ஜடம், ஜீவன் ஆகிய எல்லாமே முழுமுதல் சக்தியின் பல்வேறு வடிவங்கள்தாம்.
- புல் அடுத்து பூக்கள், மரங்கள், பூச்சிகள், பறவைகள், மீன்கள், கடைசியாக ஆண், பெண் என்று ஜனனம் வரிசைக் கிரமத்தில் நடக்கிறது. அதாவது, படைப்பில் ஒரு பரிணாம வளர்ச்சி இருக்கிறது.
மெய்ஞ்ஞானம் சொல்லும் பழங்காலப் பிரபஞ்சப் படைப்புத் தத்துவங்கள் இவை. பல்லாயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டன. விஞ்ஞானம், வானியல் போன்ற துறைகளில் நாம் அபார வளர்ச்சி அடைந்துவிட்டோம். இயற்கைக் கோள்களோடு மனிதர் படைக்கும் செயற்கைக் கோள்களும் போட்டிப் போட்டு, பிரபஞ்ச வெளியில் உலா வருகின்றன. இந்தப் புதிய அளவுகோல்களுக்குப் புராணக் கதைகள் ஒத்துவருமா?
அறிமுகம் : உலகம் பிறந்தது எப்படி?
நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயது இருக்கும் என்றாலும் மனித குலத்தின் (Homo sapiens) வயது என்று பார்த்தால் ஐந்து லட்சம் வருடங்கள். இரண்டு முதல் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித குலம் தோன்றியிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் (ஆன்த்ரோபாலஜிஸ்ட்ஸ்) மதிப்பிடுகிறார்கள்.
மனிதனின் பரிணாம வளர்ச்சி, புல்லாகிப் பூண்டாகி, புழுவாய், மரமாய், பல்மிருகமாகி, பறவையாகி, பாம்பாகி, கல்லாய், மனிதராய் வந்தது என்று மணிவாசகர் திருவாசகத்தில் சொல்கிறார். புல்லுக்கு முன்பாகவே உலகம் தோன்றியிருக்கவேண்டும். நம் உலகம் பிரபஞ்சத்தில் ஒரு பகுதி. உலகமும், பிரபஞ்சமும் எங்கே, எப்போது, எப்படிப் பிறந்தன?
கி.மு. 1700 – 1100 காலகட்டத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் ரிக் வேதம் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்கிறது தெரியுமா?
படைப்பு எப்படி, எப்போது, எங்கே வந்தது என்று யாரால் சொல்லமுடியும்?
கடவுள்களே சிருஷ்டிக்கு அப்புறம்தானே உருவானார்கள்?
சிருஷ்டி எப்போது, எப்படித் தொடங்கியது என்று யாருக்குத் தெரியும்?
யாரால் நிச்சயமாகச் சொல்லமுடியும்?
கடவுள் இதைச் செய்தாரா, செய்யவில்லையா?
வானில் இருக்கும் அவருக்கு இதற்கு ஒருவேளை விடை தெரியலாம்,
அல்லது அவருக்கும் விடை தெரியாமலிருக்கலாம்.
இப்படிப் புதிர்போடும் ரிக்வேதம், இன்னொரு ஸ்லோகத்தில் தன் பதிலைச் சூசகமாகச் சொல்கிறது.
ஆரம்பத்தில், எங்கும் காரிருள். இன்று நம் கண்ணுக்குத் தெரியும் எல்லாமே, யாருக்கும் தெரியாத நிலை. தெரியாத இந்த உலகத்தை, எல்லாம் வல்ல அவன் சக்தி மட்டுமே நிறைத்திருந்தது. அந்த சக்தியின் வெப்பத்தில் உலகம் பிறந்தது.
ரிக்வேதம் அறிவுஜீவிகளின் ஊடகம். வேதங்கள் சொல்லும் கருத்தைப் புராணக் கதைகள் ஜனரஞ்சகமாகச் சொல்கின்றன. எல்லா நாடுகளிலும், எல்லா மதங்களிலும், எப்போது, எங்கே, எப்படிப் பிரபஞ்சம் பிறந்தது? என்னும் சிருஷ்டியின் ரகசியம் தேடும் கேள்விக்குப் பதில் சொல்லும் கதைகள் இருக்கின்றன. இந்தக் கதைகளின் அணுகுமுறைகள் மூன்றுவகை:
1. பிரபஞ்சம் ஒரு பெரிய முட்டையிலிருந்து வந்தது.
2. சில ஆண் – பெண் தேவதைகளின் சேர்க்கையால் பிறந்தது.
3. முழுமுதற்கடவுள் தன் கைப்பட உருவாக்கியது.
முதலில், முட்டைக்குள்ளிருந்து பிரபஞ்சம் வந்ததாகச் சொல்லும் கதைகளைப் பார்ப்போம். இந்துமத இதிகாசங்களில் தொடங்குவோம். சிவபெருமான் முழுமுதற் கடவுள். அழிப்பதும், மறுபடி படைப்பைத் தொடங்குவதும் அவர் தொழில். மரம், பறவை, மிருகம், மனிதர் என்று எந்தவொரு ஜீவராசிக்கும் தன் இனத்தைப் பெருக்க இரு பாலினங்கள் தேவைப்படும். இதை உணர்த்தும் வகையில் சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக இருக்கிறார். வலப்பக்கம் சிவன், இடப் பக்கம் பெண்மையின் பிரதிநிதித்துவமாக சக்தி!
சிவன் தவிர யாருமே இல்லை, ஒன்றுமே இல்லை. வானம் இல்லை, கடல்கள் இல்லை, மரங்கள் இல்லை, செடிகள் இல்லை, மீன்கள் இல்லை, பறவைகள் இல்லை, மிருகங்கள் இல்லை. மனிதர்கள் இல்லை, எந்த உயிரினமும் இல்லை. தகிக்கும் நெருப்பாய் அவர் மட்டுமே இருக்கிறார்.
சிவன் தன் உடுக்கையை அசைக்கிறார். மெல்லத் தொடங்கும் ’ஓம்’ என்னும் ஒலி ஆரோஹணமாகி வெட்டவெளியை ரீங்காரமிட்டு நிறைக்கிறது. பிரணவ ஒலி – ஆதிபகவன் உருவாக்கும் முதல் சப்தம்.
சிவபெருமானின் லீலாவிநோதம், சிருஷ்டி தொடங்குகிறது. தன் சடாமுடிக் கங்கையைக் கவிழ்த்ததும், ஓடையாகத் தொடங்கும் வெள்ளம், ஊழிப் பிரளயமாகிறது. சிவபெருமான் ஒரு பெரிய தங்க முட்டையைத் தண்ணீரில் மிதக்கவிடுகிறார். அந்த முட்டை இரண்டாக வெடிக்கிறது. அதற்குள்ளிருந்து படைப்புக் கடவுளான பிரம்மா வெளியே வருகிறார்.
பிரம்மா தன் கடமையைத் தொடங்குகிறார். சொர்க்கலோகம், வானம், சூரியர், சந்திரர், நட்சத்திரங்கள் படைக்கிறார். அடுத்ததாகப் பூவுலகம், நம் உலகம் பிறக்கிறது. மலைகள், பள்ளத்தாக்குகள், கடல்கள், நதிகள், ஏரிகள்! ஆனால், உலகம் ஏன் இப்படி ஆண்டவன் இல்லாத ஆலயம்போல், குழந்தை இல்லாத வீடுபோல் வெறிச்சோடிக் கிடக்கிறது? மரம், செடி, கொடி, மீன், பறவை, மிருகம் , மனிதன் என்னும் எந்த ஜீவராசியுமே உலகத்தில் இல்லையே? பிறகு உயிர்த் துடிப்பு எப்படி இருக்கமுடியும்?
உயிர்த் துடிப்பு கொண்டுவரும் அனிமேஷன் வேலையில் பிரம்மா இறங்குகிறார். தன் உடலை, ஆண், பெண் என்று இரு பாகங்களாகப் பிரித்துக்கொள்கிறார். தலை, வாய், வயிறு, கால், கை என்று தன் உடலின் ஒவ்வொரு அவயவங்களிலிருந்தும் ஒவ்வொரு விதமான ஜீவராசியை உருவாக்குகிறார். முதலில் புல், அடுத்து பூக்கள், மரங்கள், பூச்சிகள், பறவைகள், மீன்கள் ஜனனமாகின்றன. கடைசியாக ஒரு ஆண், ஒரு பெண். இவர்கள் அனைவருக்கும், பார்க்கும், கேட்கும், நுகரும், உணரும், நடமாடும் சக்திகள் தருகிறார்.
உலகம் பிறந்துவிட்டது! விண்ணைத் தொடும் மலைகள், ஓங்கார ஒலியோடு பாயும் நீர்வீழ்ச்சிகள், அமைதியாக ஓடும் நதிகள், சலசலக்கும் நீரோடைகள், காற்றோடு கைகோத்து விளையாடும் கடல், ஆழ்கடலுக்குள் மறைந்துகிடக்கும் முத்து, பவளங்களை நாளும் தேடும் மீன்கள், திமிங்கிலங்கள், ராஜநடை சிங்கங்கள், சீறும் சிறுத்தைகள், மருள்விழி மான்கள், நம் சகோதரக் குரங்குகள், தோகை விரித்தாடும் மயில்கள், இன்னிசைக் குயில்கள், வண்ணக் கிளிகள் – பார்க்கும் இடமெல்லாம் அழகு.ஃபின்லாந்து நாட்டின் காப்பியச் செய்யுள் கலேவாலா (Kalevala) சொல்லும் கதை இது.
பிரபஞ்சம் பிறப்பதற்கு முன்னால், வெட்ட வெளியும், காற்றும் மட்டுமே இருந்தன. நம் ஊரில் காற்றின் தெய்வம் வாயு பகவான். இதேபோல், ஃபின்லாந்தில், காற்றின் தெய்வம் இல்மட்டார் (Ilmatar) என்னும் கன்னிப் பெண் தேவதை. நீண்ட கூந்தல் கொண்ட அந்த அழகுக் கடவுள் தன் நேரத்தை எப்படிச் செலவிடுவாள் தெரியுமா? வர்ணஜாலம் செய்யும் வானவில்களை எண்ணுவாள், அல்லது, தன் நீண்ட கூந்தலைத் தவழ்ந்து வரும் காற்று தழுவவிட்டு ரசிப்பாள்.
ஒரு நாள், கிழக்குக் காற்று இல்மட்டாரின் கூந்தலைத் தொட்டு விளையாடியது. அவள் காதில் , கொஞ்சுமொழி பேசியது. இல்மட்டார் உடலெல்லாம் இதுவரை அனுபவித்தேயிராத புளகாங்கிதச் சிலிர்சிலிர்ப்பு. அவள் சலனம் கிழக்குக் காற்றுக்குப் புரிந்தது. சில்மிஷங்கள் தொடங்கினான். உடல்கள் தழுவின. உணர்ச்சிகள் எகிறின. வாயுவின் வாரிசு இல்மட்டார் வயிற்றில் வளரத் தொடங்கியது.
கருவை உருவாக்கிய காற்று காணாமல் போனான். எல்லாத் தாய்களையும்போல், வயிறு நிறையச் சுமையும், நெஞ்சு நிறைய ஆசைகளுமாக இல்மட்டார் காத்திருந்தாள். எழுநூறு ஆண்டுகள் ஓடின. இல்மட்டாரின் தலைக்கு மேலாக ஒரு தெய்வீகக் கழுகு பறந்தது. அவள் தலையைப் பலமுறை சுற்றிச் சுற்றி வந்தது. அந்தக் கழுகும் அவளைப் போலவே ஒரு கர்ப்பிணி. தன் வயிற்றில் சுமந்துகொண்டிருந்த ஆறு முட்டைகளை எங்கே பத்திரமாக இறக்கிவைக்கலாம் என்று தேடிக்கொண்டிருந்தது. இல்மட்டாரைப் பார்த்தவுடன், தன் குஞ்சுகளை அவள் தாயாகப் பாதுகாப்பாள் என்னும் நம்பிக்கை கழுகுக்கு வந்தது. ஆறு முட்டைகளையும் இல்மட்டார் காலடியில் போட்டுவிட்டு, எங்கோ பறந்து மறைந்தது.
நிறைகர்ப்பிணி இல்மட்டார் மெள்ள எழுந்தாள். ஏழு முட்டைகளும் அவள் காலடியிலிருந்து நழுவி, பத்திரமாய்க் கடலுக்குள் விழுந்தன. கழுகு ஆறு முட்டைகள்தானே போட்டது என்று கேட்கிறீர்களா? ஏழாவது முட்டை, அவள் வயிற்றில் இருந்த குழந்தை!
இல்மட்டார் குனிந்து பார்த்தாள். தான் பார்க்கும் காட்சிகளை அவளால் நம்பவே முடியவில்லை. கடலில் விழுந்த ஏழு முட்டைகளும் வெடித்தன. சொர்க்கலோகம், பூவுலகம் என ஏழு வகை உலகங்கள்* பிறந்தன. முட்டைகளின் வெள்ளைக் கரு சூரியனாகவும், மஞ்சள் கரு சந்திரனாகவும், முட்டைத் தோடுகள் நட்சத்திரங்களாகவும் உருவெடுத்தன. ஆமாம், பிரபஞ்சம் இப்படித்தான் பிறந்தது.
(*ஆச்சரியமாக, இந்துப் புராணங்களும், ஏழு உலகங்கள் இருப்பதாகச் சொல்கின்றன. அவை – பிரம்மா வாழும் சத்யலோகம், கடவுள்களின் தபாலோகம், பிரம்மாவின் வாரிசுகள் தங்கும் ஜனலோகம், ரிஷிகள் உறையும் மகர்லோகம், தேவர்களின் சுவர்க்கலோகம், பூமிக்கும் வானத்துக்கும் இடைப்பட்ட புவர்லோகம். மனிதர், மிருகங்கள், பறவைகள், நீர்வாழ் இனங்களின் பூலோகம்).
சீனப் புராணம் என்ன சொல்கிறது? ஆரம்பத்தில் வெற்றிடம் தவிர ஒன்றுமே இல்லை. யின் (yin), யாங் (yang) என்னும் மாறுபட்ட இரண்டு சக்திகள் எங்கிருந்தோ வந்தன. இவற்றை ஆண், பெண் சக்திகள் என்று வைத்துக்கொள்ளலாம். 18,000 ஆண்டுகளுக்குப் பின், இந்த இரண்டு சக்திகளும், ஒரு தெய்வீக முட்டையில் ஐக்கியமாயின. அந்த முட்டை வெடித்தது. அதற்குள்ளிருந்து பாங்கு (Phan Ku) என்னும் பிறவி வந்தான். பிரம்மாண்ட உருவம், உடல் முழுக்க முடி, தலையில் கொம்பு. அவன் கையில் கோடரி.
பாங்கு தன் கோடரியால் முட்டையை வெட்டினான். யின், யாங் ஆகிய இருவரும் தனித்தனியே எழுந்தார்கள். மந்திரக் கோல்போல், தன் கோடரியைக் காற்றில் வீசினான். உலகம் பிறந்தது. இன்னொரு வீச்சு – வானம் வந்தது. தன் கைகளால் வானத்தைத் தூக்கி உயரே நிறுத்தினான்.
இன்னொரு 18,000 ஆண்டுகள் ஓடின. பாங்கு மரணமடைந்தான். அவன் மூச்சு காற்றும், மேகங்களுமாக மாறியது. அவன் குரல் இடியாக வடிவெடுத்தது. அவன் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், உடல் மயிர் நட்சத்திரங்கள். அவன் தலை மலைகள். ரத்தம் நதிகள். பாங்குவின் வியர்வை மழையானது. அவன் உடையில் ஒட்டியிருந்த தெள்ளுப் பூச்சிகள் (fleas) மீன், மிருகம், பறவை எனப் பல வடிவெடுத்தன. ஆண், பெண் என்னும் மனிதப் பிறவிகளை மட்டும் பாங்கு படைக்கவில்லை. இந்தப் படைப்பைச் செய்த கடவுள் தன் உடலில் பாதியைப் பெண்ணாகவும், மீதியைப் பாம்பாகவும் கொண்ட, நூவா (Nuwa) என்னும் தேவதை. பிரபஞ்சத்தின் ரிஷிமூலம் முட்டை என்று சொல்லும் இந்துமத மற்றும் ஃபின்லாந்து, சீன நாடுகளின் புராணக் கதைகளைப் பார்த்தோம். யுனிவர்ஸ் என்னும் ஆங்கில வார்த்தையின் பொருள் அண்டம் என்று அகராதி சொல்கிறது. தமிழ் அகராதியைப் புரட்டுங்கள். அண்டம் என்றால் இரண்டு அர்த்தங்கள் – பிரபஞ்சம், முட்டை. இந்த இரட்டை அர்த்தம் நிச்சயமாகத் தற்செயல் இணைவாக இருக்கமுடியாது. அறிவியல் மேதைகளைவிட தமிழ் அறிஞர்களுக்குப் பிரபஞ்ச சிருஷ்டி ரகசியம் இன்னும் தெளிவாகத் தெரிந்திருக்குமோ?