பழவேசக் கிழவி சிறுகதை

தொண்டைக்கும் கூட்டுக்கும் இழுத்துக்கிடந்த கீழத்தெரு பழவேசக்கிழவி விடியக்காலம் மம்மல்ல வண்டியவுட்டாளள் அரீர்னு ரெண்டு வருசமா கெடந்த கட்ட இப்பபோகும் பெறவுபோகும்னு எதிர்பார்த்து கெடந்தகட்ட. மூனா வருடம் ஆனி மாதப்பொங்களுக்கு அக்னிசட்டி எடுத்து சாமி ஊர்விளையாடப் போனப்ப குடிக்கிறத குடிச்சிட்டு செவனேனு வீட்ல கெடக்காம சாமிகளோடு நாடாக்கமாரு தெருவுக்கு போகையில் இவளும் அவுகளோட தொயங்காட்டி வந்தவ. கூட்டத்துக்குள் நெரிசலில் இடிபட்டு நாடாக்கமாரு அம்பலகாரு வீட்டுக்கு மின்னாடி சாமி மும்மரமா ஊர் விளையாடுது. திட்டங்கட்ட கூட்டம். கூட்டத்தை லாடிப்பா நில்லுங்க…. நில்லுங்க….னு ஒருவர் சொல்லி முன்னால் உள்ள ஆளுகளை பின்னாடி தள்ளியதில் ஒருவருக்கொருவர் இடித்து முனியசாமிநாடார் வீட்டு சாக்கடை சலவக்குழியில் கால் எடரி விழுந்தவதான். எத்தனையோ கைப்பத்தியம் பாத்தும் ஒன்னுநடக்கல….. விளாத்திகுளம் தர்மாஸ்பத்திரிக்கும் கொண்டு போயிபார்த்தாக ஒன்றும் அவகிட்ட அண்டல பின் படுத்த படுக்கையா ஆகிப்போனா ஆனா சாப்பாடுமட்டும் குறையல…… நேரத்துக்கு நேரம் நல்ல சாபóபாடு. தட்டாத தீம்பண்டம்…… எந்தக்குறையிமில்ல……. பழவேசக்கிழவிக்கு மூனு ஆம்பள மக்கமாரு ரெண்டு பொம்பள மக்க. மூத்தவன் சோலையப்பன்
ஊருக்க கெழக்க ரெட்டியபட்டில பெண்னு எடுத்து உள்ளுர்ல ஏவுன வேல எடுத்த வேல செஞ்சõட்டு ஒரு மொதலாளி வீட்ல சேந்தடியா தஞ்சம்னு கெடக்குதுக. ரெண்டாங் காட்சிகாரன் ஆத்திமுத்து புதூர் பக்க கந்தசாமிபுரத்தில் பொண்னெடுத்து கோடாங்கி குறின்னு குடும்பத்தவுட்டு மலைக்குப் போறேன் ஊர்ஊரா திரியதான். ரெண்டு பொம்பல மக்கள்ல மூத்தவல விருதுநகர் வெல்லாகுளத்துல கெட்டிக்கொடுத்த ரெண்டு மக்கமார பெத்துக்கொடுத்துட்டு அம்மை வந்து குளுந்துட்டா. இன்னிக்கும் வருசா வருசம் மாசி மாதம் மாசி மாதம் சாமியகும்டுராக. அடுத்தவளை கீ காடு உச்சிநத்துல கெட்டிக்கொடுத்து அங்ன பிழைப்பிற்கு வழியில்லாமல் இங்கையே தாய் தகப்பனுக்கு ஒத்தாசையா அண்னன்தம்பிமாரு பக்கத்துல வீட்டப்போட்டு உள்ளூர்ல இருந்துட்டா. கடைசிமகன் முனியாண்டி பட்டாளத்துல இருக்கான். பட்டாளத்துல வருசத்திற்கு ஒருதடவை வுக்கு வருவது பழக்கம். பழவேசக்கிழவி சீக்குல விழுந்த பிற்பாடு அஞ்சாறு வட்டம் வந்துவிட்டுப் போயிட்டான். இப்ப வந்து போயி ஒன்றமாசத்துக்குள்ள இப்படி நடந்து போச்சி. அவனுக்கு தந்தி கொடுக்கத்தான் விடியக்காலம் செங்கமங்கலா மேற்கு மார்தாண்டம்பட்டி வூடுகாட்டுப்பாதைக்கு நடந்து லயன் காருக்கு ரெண்டு மட்டத்துப்பயக விளாத்திகுளம் போனார்கள். பட்டாளத்துக்காரன் குடும்பம் உள்ளுர்லதான் இருக்கு. அதுககிட்டத்தான் பெருசுக பழவேசக்கிழவிக்கும் சித்திரனுக்கும் சாப்பாடு ஒரு ஏங்கல் தாங்களுக்கு மத்த மக்கமாரு வருவாக…… ஆண்ட பண்ட அத்தனையும் பட்டாளத்துக்காரன் வீட்லதான். இவெ இப்படி இழுத்துட்டுக் கொடக்குற நாள்லயும் சித்திரன் என்னியாரமும் தண்ணியடிச்சி போதைமுத்தி லம்பிட்டுத்தான் அலைவான். மெனக்கட்டு இலந்தக்குளத்து நாடாக்கமாருக்கு கள்பானை சுமக்கப்போவான். இலந்தக்குளத்து கள்ளுன்னு சுத்திப்பட்டியில அவ்வள பேரு. அந்தஊர்ல எந்தவீட்லயும் போயி குடிக்க கொஞ்சந்தண்ணி தாங்கனு கேட்டா படீர்னு கள்தான் மோந்து குடுப்பாக அவ்ளபேரு. பனையிலிருந்து கள் இற்க்கிற இடத்திலேயே ஒரு இரண்டு பட்டை நிமூர நல்ல வயிறுமுட்ட குடிச்சிட்டு. கள்ளுப்பானைய தலையில் தூக்கி வக்கிறதுதான். ரெண்டு பட்ட கள்ளுபதனி உள்ள போனதும் தன்னால காட்டுப்பாட்டுக்கு பஞ்சமிருக்காது தலையில் தூக்கி வச்சிக்கிட்டு செடிங்காட்டு வூடுகாட்டுப்பாதைக்கு முள்ளுமுடவா கூடத்தெரியாம போவான். அப்படி ஒன்றுரெண்டு முள்ளுக செடிக பாதையில் டெந்ததுன்னா. நொருநொருனு நொருங்கிப்போகும். இவன் அந்தப்பாதைக்கு வருவதைக்கண்ட அந்தப்பாதைக்கு ஒத்த சத்த வர்றஆளுக பயப்படும் பொம்பள புள்ளிக துப்பரா அந்தப்பாதைக்கே வராதுக… ஆளு நல்ல வாட்ட சாட்டமா நெடுநெடுனு பாடக்கம்பு கெனக்கா நல்ல வளத்தி….. வளத்திக்கேத்த ஒட்டிப்பிடிசóச சத்து வெள்ளவெளேர்னு நரைச்சதலை. ஒரு பள்ளுகூட விலாத நேர்பள்ளுவரிசை. எழுவது வயசுலயும் எத்தனை அடிமாட்ட அருத்துப்
போட்டாக்கூட எழும்ப சுக்குநூராக்கிரும் அப்படி வளுவான பல்லு. என்னியாரமும் கொச்சவாட வீசும் திரேகம். கள்ளுப்பானை ஏத்தி தலையல் வைத்துவிட்டு இந்தமாதிரி இன்ன இடத்தில் வைக்கனும்னு சொல்லி ஓலபட்ட நிமுர கல்லுஊத்திக் குடிக்கஉட்டு போச்சொன்னா தாய்லி குடிச்சிட்டு எப்பேர்பட்ட ஆளு தடுத்தாலும் நிறுத்த மாட்டான். அப்படியாபட்ட சூரன் சுமக்கையில் வழிநெடுகிளும் தலையில் இருக்கிற மொடர்பானை அளம்பி அலப்பி அலப்பி தலைவழியா வழஞ்சி வாய்க்கு வருவதை நக்கி நக்கி ருசி கண்டவன். விடியப்போறவன் பொழுதுசாய அடிதிரும்ப காதில் ஏதாவது பூசுத்தி கள்ளு வீச்சத்தோட வந்ததும் சோத்துலதான் குறிய வருவான். ஒரு பித்தலைக்கும்ப நிரைய குதுரவாலி சோறு தயாரா வெளிதின்னையில் இருக்கும். நல்லா குத்துக்கால் வச்சி குத்தாச்சி வெங்கலக் கும்பாவுக்கு ரெண்டு கும்பா திம்பான். என்னாலும் கருவாட்டு உப்புச்சார் இருக்கனும் இல்லையினா தக்காபுக்கானு குதிப்பான். கருவாட தொட்டுக்கிட்டு உப்புச்சாரை பினைஞ்சி கவக்கவக்குனு முழுங்கறவன் தான் ரெண்டு கும்பா தின்னுமுடிக்கிற வரைக்கும் ஒரு பொட்டு தண்ணிகுடிக்க மாட்டான். வெள்ளிசெவ்வாயினு எதுங் கிடையாது தினமும் கருவாட்டு வீச்சம் வேனும் இல்லை கருவாடு சுட்டாச்சும் தட்ல இருக்கனும் இல்லனா திண்டுக்குமுன்டா பேசி சன்டை போடுவான். வெள்ளி செவ்வாயினு இந்த வீடுனு இல்ல எந்த வீட்லயும் கருவாடு மீனு இறைச்சி வகைகள் சேக்கமட்டாங்க அவுக குலதம்பரசாமிக்கு ஆகாது. இபப்ப நெதமம் கேக்கிறெனு கெடந்து கெழவி முனுமுனுப்பா. இருக்கங்குடி மாரித்தாய்க்கு வாராந்தரம் போரேன் வெதரமிருக்கேன்…… கறிபுளி சேர்க்கக்கூடாது. நீவாட்டுக்கு கண்டக் கழுதய கேட்கிறியேனு அதட்டுவா…….
போறீயா…… தாய்லி….. சிரிக்குயுள்ள வெரதம் கிரதனுட்டு ஓவ்ன் வேலையப்பாரு…… கருவாடு மட்டும் இல்ல சிரிக்கியுள்ள கும்பா முத்தத்துக்கு பறக்கும்……னு சித்திரன் நெருநெருனு பல்லக்கடிச்சிட்டு கத்துவான். அதுக்குப் பயந்தே நெதமும் ஏதாவது கவுச்சி அவனுக்குன்னு தயாராஇருக்கும். வõடியற்காலம் மம்மல்ல தலக்கோழி கூப்புடவும் கிளம்பறவன்தான் எங்க போனான் தேடவேண்டாம் நேரா கள்ளுக் கடைதான். சில நேரங்களில் போதைமுத்தி தரக்குரைவாக பேசி எவன் கூடையும் சிலுவ இழுத்து ஓலப்பட்டை பூசை வாங்கிவர்ற நாளும் இருக்கும். எல்லாம் உதுத்துப் போச்சி.
விடியற்காலம் ம்மல்ல தலக்கோழி கூப்பிடவிம் ஒன்னுக்கு இருக்க எந்திரிச்ச பட்டாளத்துக்காரன் பெண்டாட்டி எப்பயும் வந்து பாக்குற மாதிரி படுத்த படுக்கையா கெடந்த நாள்ல இருந்து வெளி வராண்டாவுல நார் கட்டில் போட்டு நல்லா சுத்தி நல்ல அடப்புக்கு பட்டாளத்து
கம்பளிப்போர்வைகள சுத்தி நல்ல அடப்பு கெனக்கா சுத்தி வச்சிருந்தது. எப்பயும் கால் மாட்ல பழவேசக்கிழவி இளையமகா சத்தங்கித்தங் கொடுத்தா எழுந்திரிக்கிறமாதிரி கால் மாட்டில் படத்துக்கிடந்தான். போயிட்டு தலவாசல் வழியா நடுவீட்டுக்குப் போறப்ப கரட்னு ஒரு சத்தம் சந்தேகத்தோடு கால்மாட்டில் படுத்து கெடந்த கிணாவி மகா அப்பத்தான் அசந்து தூங்கி இருப்பாபோல….. மைனி….. மைனி….. எதோ கரட்னு சத்தம் கேக்கு செத்தம் எந்திச்சிப்பாருங்க..னு சொல்ல எந்திரிச்சிப்பாத்த கிழவி மகா கையக்காலத் தொட்டுப்பார்த்துட்டு அய்யயோ அம்மா…… என்ன பெத்ததாயி எங்களையெல்லாம் வுட்டுட்டு பொயிட்டயே….. எங்களுக்கு யாரு இருக்கா…..னு நடுச்சாமத்துல திண்டுதிண்டுனு மார்ல அடிச்சி கத்தி கதறினாள் பட்டாளத்துக்காரன் பொண்டாட்டியும் கெடந்து கத்தி ஒவ்வொரு குரலா கூடியது. கூட்டம் கூடியது. தெருச்சனம் பூரா சாமத்துலயே எந்திரித்தார்கள். வீடே நிறம்பியது. கொஞ்ச நேரத்தில் மேகலக்குடிக்குள் ரேடியோ செட் தூக்கப் போன வகையில் ஊருக்கள் தெரிய ஆரம்பிச்சது மேலக்குடிக்குள் இருந்து ஒன்று ரெண்டு வேண்டிய ஆளுகளும் சாமம்னுகூட பார்க்காம வந்து துட்டி கேட்டார்கள்.
சாமத்துலயே குளிப்பாட்டிச் செஞ்சி நாடிக்கட்டுப் போட்டு கண் நிமுர மஞ்சள் அரைத்து வைத்தார்கள். தகரப்பெட்டிக்குள் மூனாவருசம் கோயில் கொடைக்கு இளையமகன் பட்டாளத்துக்காரன் எடுத்துக்குடுத்த கரும்பச்சை கண்டாங்கிச் சேலையை எடுத்து உடுத்தினார்கள். அன்னியாரத்தலயே சோமசுந்தரநாடாரை எழுப்பி கடையை திறந்து பன்னீர் பத்தி முழிப்புக்கு காலையில் துட்டிக்கு வர்ற ஆள்களுக்கு காப்பிக்கு மண்டவெல்லம் தேயிலை வாங்கினார்கள். வீட்டுக்கு கீழோரம் கால் நீட்னமேனிக்கு வடக்காம குத்தாய்க்க வச்சி ரெண்டு சைடுலயும் சாணிய பிள்ளையார் கெனக்கா பிடிச்சி ரெண்டு பாக்கெட் பத்தி ஒடச்சி குத்தா சாணியல குத்தி வச்சிருந்தார்கள். நீட்ன ரெண்டு கால் பெருவிரல் ரெண்டையும் நல்லா இருக்கா சக்குனு கெட்டி கை ரெண்டையும் துடைமேல் வைத்த வண்ணம் சுவற்றில் சாய்ந்து வைத்திருந்தார்கள். தெருச்சனம் பூரா கூவோகுலையோனு அழுதுட்டுக் கெடக்கு. ஊர்பொதுமடத்துல நாளஞ்சி கம்புகளையும் அஞ்சாறு தென்னந்தட்டியையும் எடுத்தார்கள் வீட்டு முன்னாடி நட்டி பந்தல் போட்டார்கள். பநóதலில் பச்சவோலையில் விடியற்கால முதல் காருக்குப் போய் வாங்கிட்டு வந்த பிறந்த வீட்டுக் கோடி தொங்கியது. முதல் காருக்கே ஒவ்வொருத்தரா சுத்திப்பட்டி ஊர்களுக்கு துட்டி சொல்ல வழிச் செலவுக்கு துட்டு கொடுத்து அனுப்பிக்கொண்டிருந்தார்கள். கீ காட்டுப்பக்கம் ரெண்டாளு. மேகாட்டு கோவில்பட்டி புதியம்புத்தூர் க்குனு ரெண்டொரு ஆளுக மற்றும் வடக்க தெக்கன்னு மம்மல்ல ஆளுக்கள அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.
ஊர் பெருசுகள் ரெண்டுபேர் விருவிருன்னு வந்தார்கள். வீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த பழவேசக்கிழவி மூத்த மகன் சோலையப்பனைக் கூப்பிட்டு என்னப்பா நீயே இப்டிக்குத்தாட்சிருந்தா எப்பிடி செரி…… ஆனது ஆகிப்போச்சி……. இன்னும் ஆகவேண்டிதப் பாக்காம ஓம்பாட்ல தலை ஓட்டிக்கிட்ருந்தா எப்படி……. ஒங்கப்பன் தாய்லி ராத்திரி என்னியாரத்துல வந்தானோ……. எம்புட்டுத்தான் குடிச்சானோ போதமுத்தி அழுதுட்டுக் கெடக்கான் கேட்டதுக்கு மூத்தவனக் கேளுண்டான்…… எப்படி எந்தெந்த ஊருக்க ஆளு அனுப்பனும்…… அனுப்புன ஆளுகள்ல ஏதும் விடுதலை அயிருக்கா……. ன்னார் தர்மகர்த்தா.
என்ன மாமா இதெல்லாம் நான்தான் சொல்லனுமா……. ஒங்களுக்குத் தெரியாதா ஊர் கட்டுபடி அனுப்புங்க…….
இல்லய்யா…….. ஒங்கமொதலாள வீட்டுக்கு ஏதுவும் எலவு சொல்லி வுடனுமா…….
ஊர் வழக்கப்படி தவுல் சொல்லி வுடுங்க……. ஒங்களுக்கு பெரியாளுக்கு தெரியாத வெவரமா இருக்கு…….
அதான……. மருமகன் சொல்றதுதான் கரெக்ட்…… சின்ன மொலளியோட அம்மா தும்மக்கம்மா செத்த பிற்பாடு பெத்ததாய் கெனக்கா பாத்ததுக்கிட்டது. பெரிய மொதலாளியோட பொஞ்சாதி தும்மக்கம்மா செத்த வொடனே மேகாடு கீகாடுனு பிள்ளப்பாலுக்கு ஆள்தேடி அலஞ்சாக……. அவ்வள ளேசுல ஆள் அகப்படல அந்நேரம் கடேசிப் பயல் பட்டாளத்துக்காரன் பெத்துயிருந்த பழவேச மைனி எதையும் எது பாக்காம சின்ன மொலாளி பெத்துரெட்டிக்கு தாய்பால் கொடுத்தது. அதுக்ன்னாலும் முதலாளி வீட்டுக்கு தாக்கல் சொல்லனும். நாமெ சொன்னாலும் சொல்லாட்டாலும் அவுக செய்யவேண்டிய கட்ட கண்டுசனா செய்வாக. ஊர்லயிருந்து மொறப்படி ரெண்டு ஆளுக பொய்ட்டு வாங்க…… ன்னார் ஊர் தங்கலான் சுடலை.
ஊர் தங்கலானும் ரெண்டு நடுத்தர ஆளுகளும் பலபலனு விடியவும் மேல வீட்டு பண்னைவீட்டுக்கு போனார்கள். வெளித்தின்னையில் செக்கச் செவேர்னு மேல்சட்டை பேடாத வெத்து திரேகத்துடன். நரைத்த வெட்டரிவாள் மீசை பஞ்சுமிட்டாய் தலைமுடி வெத்தலைகரை படிந்த பற்கள். கூர்கூராய் நீண்டு வளர்ந்த கைவிரல் நகம் பிறந்த நாளில் இருந்து மேலில் சட்டைபிறப்பு கானாத உடம்பு. போர்வை மாதிரி என்னியாரமும் தோளில் கிடக்கும் தேங்காய்ப்பூத் துண்டு சுருட்டுக்குடித்து புகை படிந்த செம்பட்டை நிற மீசையோடு வெளித் தின்னையில் உட்கார்ந்திருந்த பெத்துரெட்டி இவ்களக் கண்டதும்
வாங்கப்பா…… எல்லாம் கேல்விப்பட்டேன் மம்மல்லயே……. லேடியா சத்தம் கேட்கவும் கீழத்தெருவுல என்னன்னு ரோசன ஓடுச்சி மேளச்செட்டு லேடியாவில சூரங்குடி சிம்ளாம் கொட்டு போடவுந் தெரிஞ்சி போச்சி இவெதான் அங்ன இலுத்துட்டுக் கெடக்கா……. அடத் தாய்லி செலவு வந்துட்டுன்னு பேசிக்கிட்டுத்தான் இருந்தேன். மம்மல்ல ஊர் அம்பட்டப்பய வந்து சொன்னான். சரி ஆக வேண்டியத பாருங்க…… ன்னார் துக்கத்தை தொண்டைக்குள் வைத்த வாறு.
செரி மொலாளி நாங்க கௌம்புறோம்.
ஏப்பா சொடலை துட்டு துக்கானினு..
அதலாம் ஏற்பாடாகிட்டு மோலாளி
செரி செரி என்னியாரம் எடுக்கப்போரீக.
அது தேரம் பொழுதடைஞ்சிறும் அசுலூரு ஆளுக வரனுமில்ல.
போயி ஆகவேண்டியதை பாருங்கப்பா.
உத்தரவு வாங்கிக்கொண்டு கிளம்பினார்கள். ஒவ்வொரு பஸ் டயத்துக்கும் ஆளுக இறங்கிய வண்ணமிருந்தார்கள். துட்டி வீட்டுக்கு வருகிறவர்களுக்க பசியாற ஊர் பொது மடத்தில் சாப்பாடுக்கு ஏறóபாடு செய்து சாப்பாடு நடக்கிறது. நேரம் ஆக ஆக நாலா ஊர் சனங்களும் திமுதிமுனு கூடுது.
ஏய் கொப்புலி…… ஏப்பா ஒன்னியத்தா…… ன்னார் ஊர் தங்கலான்.
சாமி லேடியா சத்தத்தில காதுலவுலலையா.
ஏப்பா நீ தேருக்கு வேண்டிய ஏற்பாடு செய் போ….. போ. நீ அதக் கைபாரு தேரமாயிட்டுல்ல சும்மா நட்டமா நிக்காத
ஆகட்டும் சாமி
தேரம் அடித்திலும்புது இன்னும் மோலாளி வீட்டிலயிருந்து கோடித்துணி வரலயே யேன்இம்புட்டுத் தேரமாகுது. டயம் தப்புது தலப்புள்ள வேற சுடுகாட்டுல எரிக்கனும் அதுக்கு கண் வெளிச்சத்துல போனாத்தான் கை பாக்க முடியும் சட்டுன்னு தாக்கல் கொடுங்கப்பா என்று ஊர் பெருசுகள் தங்களுக்குள் புலம்பிக்கொண்டார்கள்.
மோலாளி வீட்டில் வாக்குவாதல் நடக்கு எய்யா பால் குடுத்தா அதுக்குத்தான் சம்பளம் குடுத்தம் கொத்து குடுத்தம் கணடத கழுதைய நெனச்சிக்கிட்டு கீழத் தெருப்பக்கம் பொயிராதீங்க. இந்தக் காலத்திலையும் பால் குடுத்தா மோர் குடுத்தான்னுட்டு சந்திசிரிக்க வச்சிராதீக….. செவனேனு கோடி எடுத்திகளா ஊர் அம்பட்டையங்கிட்ட குடுத்தெடுத்து அழ்ந் கருமத்த செய்யுங்க ஒங்களால நம்ம சாதிசனத்துக்கு ஒரு
அசிங்கத்த வீட்டுக்கு கொண்டு வராதீக….. நடு வீட்டுப் பண்னையா தூனு துப்பிரப் போராக நம்ம வீட்டுக்குன்னு ஒரு மருவாதி இருக்கு அத ஒரு கீசாதிக்கு செய்யப்போயி எலந்திராதிக நம்ம சாதியென்ன கோத்திரமென்ன பண்னவீட்டக் கவுரவமே மண்னாப்போயிரும் னு பெத்துரெட்டி மக்கமாருக மாறி மாறி அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
கவுட்டுக்குள் தலையைப் போட்டபடி ஆட்டுரலில் உட்கார்ந்திரந்த பெத்துரெட்டி கண்ணில் கண்ணீர் சொட்டு சொட்டாய் தரையில் விழுந்தது. அப்படித்தா போரேனு சொன்னீங்கன்னா பெறந்தாங்கூலி எழுதிக் குடுத்துருங்க நாங்க நம்ம சாதிசனதத்தோட இருந்துறோம்.
சட்டுன்னு கோவத்தோட எழுந்த பெத்துரெட்டி தாய்மாமன் நல்லையரெட்டி லேய்…… என்னல பேசுத தாய்லி நீங்க பேசுறது ஒங்களுக்கே நல்லாயிருக்காலே ஒங்களுக்கு என்னலே தெரியும் அவெ நம்ம வீட்டுக்கு மாடா ஒழைச்சவவெ காடென்ன கரையென்னனு ரவ்வா பகலா மாடுலயும் கேவலமா ஒழைச்சவலெ அவளுக்கு இந்த கடேசிகாரியத்தை செய்யவுடுங்க தாய்லி உங்க சொத்துபத்து ஒன்னும் மிஞ்சாது வின்னு கத்தக்கூட ஒருசனம் இருக்காதுலெ அவெ இரத்தத்தப்பூரா ஒங்க அப்பனுக்கு பாலா கொடுத்தவெலெ இப்ப ஒங்களுக்கு தெரியாது இவென இந்த ஒரு காரியத்ததை மட்டும் செய்யவுடுங்க தடுக்காதீக….. அவெ பாவம் ஒங்கள சும்மாவுடாதுலெ.
சும்மாயிருந்தாத்தா…… நீருதான் இம்புட்டுக்கும் உசுக்காட்டி விட்டது. நீரு ஒமறு சோலியப்பாறும் செவனேனு ஒமறு சூத்தப்பொத்தும்.
சரிப்பா நாஞ் சூத்தப் பொத்துதேன் ஏப்பா பெத்து ஒங்க ஆத்தா ஒன்னிய பெத்து முட்டு வீட்டுக்குள்ளயே செத்துப்பொயிட்டா. ஊர்பூரா தேடியும் நம்மசாதியில புள்ளப்பாலுக்கு ஆள்லில்ல அம்புட்டுத் தட்டுப்பாடு. ஆளருந்தாலும் இதுக்கு வருவாங்களா. வரல சுத்துப்பட்டி நாளா ஊருக்கும் கொடவண்டி பூட்டி தேடியும் ஆளில்ல நம்ம வீட்டுல குத்திக் குடிச்சிக்கிட்டுயிருந்த பழவேசத்துக்கு கடேசியா பட்டாளத்துக்காரன் பொறந்துருந்தான் நாளு நாளாகியும் ஆள் கிடைக்கல நீ வீல் வீல்னு காலக்கைய உதரி அழுத ஒங்க அய்யாதான் இப்படிக் கெடந்து அழுதுகிட்டு கெடந்த செத்துப்போயிறக் கூடாதுனு சொல்லி பழவேசக்காரிகிட்ட கேட்டாருங்கிறதுக்காக தட்டாம முட்டுவீட்டுக்குள்ளயே ஒனக்கு பால் கொடுக்க ஆரம்பிச்சா. பாவம் பொறந்ததும் தாய்ப்பால் கூட குடுக்காம நா வறண்டு பொயிறக்கூடாதுன்னு குடுக்க ஆரம்பிச்சா அது தொயந்து குடுக்க வேண்டியதா போச்சி ஆனா ஓமகன் சொன்னானே
கொத்து கொடுத்தோம்னு எம்புட்டு கொத்து கொடுத்தாலும் தகுமாலே…… ஓம் ஒடம்புல ஓடுரது ரெத்தம் இல்லையா? அவெ பாலு அவெ பிள்ளைக்கு கூட இல்லாம நித்தமும் நீ குடிச்சிறுவ வீட்டுக்குப் போனா அவெ புருசன் சித்திரச்சாம்பான் கள்ளக் குடிச்சிட்டு வந்து தக்கா புக்கானு கத்துவான் அரட்டுவான் அம்புட்டையும் கண்டுக்காம ஒனக்கு பால் கொடுத்தாய்யா. அவெ பிள்ளைக்கு தெனமும் அத்தக்கூல் தான். அப்பேர்பட்டவளுக்கு கடேசி காரியத்தை செய்யவுடமாட்டேங்கீக. இதமட்டும் நீ செய்யல நீ மட்டுமில்ல பெத்து ஒம் பிள்ள கொள்ளிகூட மிஞ்சாது வெளங்காது. ஊருக்கும் சாதிக்கும் பயந்து பாவத்த சொமக்காதே.
செவனேனு இறுந்தாத்தா நீருதான் இம்புட்டுக்கும் சனியன் இது ஊர் கட்டு தாத்தா நம்ம சாதிசனங்க நல்லது கெட்டதுகல்ல வந்து கலக்க மாட்டாக எங்களுக்கு நம்மசனம் வேனும் ஊர மீற மிடியாது அப்படி போறதா இருந்தா எங்கள தல மொழுகிட்டு போட்டும்.
யெய்யா ஒமருகிட்டத்தான் சொல்லிக்கிட்டு இருக்கோம் செனேனு உம்முன்னு இருந்தா எப்படி மூனாவருசம் தெக்குத்தெரு விட்டிக்கருப்பன் வீட்டுக்க ஒரு எலவுக்கு போனதுக்காக நடு வீட்டுமோலாளி தென்டங்குடுக்கலயா அதென்னமோ லேசுமாசா போச்சி இம்புட்டையும் யோசியும். கவுட்டுக்குள் தலையை வைத்து குனிந்திருந்த பெத்துரெட்டி பெருசா யோசனை பன்னினார். கõளிவீட்டு மொதலாளி பண்னவீட்டில் எஎத்தனையோ ஆஸ்த்தி இருந்தும் ஒத்தைக்கொரு வாரிசு அதும் பொட்டப் புள்ளைக்கு நாடுபூரா சுத்தி வீட்டோட மாப்புள்ள பார்த்து தடபுடலா கலியாணம் கெட்டி வச்சாரு…… தலப்பெரசவத்துல கஸ்டப்பட்டு பேருகாலத்துக்கு டவுன் ஆஸ்பத்திரியெல்லாம் போயி புள்ளதலபெரண்டு கெடக்குதுன்னு சொல்லி சுகப்பேருகாலமில்லாம கஸ்டப்பட்டு பெத்தும் பெத்த பிள்ள மொகத்தக்கூட பாக்காம வெட்டு கெனக்கா வந்து முட்டு வீட்லெயே செத்துப்போனா தயாப்பிரிஞ்ச பச்சமண்னுக்கு பால் கொடுக்கக்கூட சொந்தத்திலேயே தட்டிக்கழிச்சாக பாலுக்கு ஆளிருந்தும் இந்தச்சாதியில ஆள்வரல. வரமாட்டேன்டாக அந்தபுள்ளய அனாத இல்லத்துல குடுத்து வளத்தாக இப்படிப்பட்ட சமூகத்துல தான்ரெத்தத்தப்பூரா பாலாக் குடுத்துட்டு செத்துக் கெடக்கா. தான் சாதியும் மக்கமாருந்தான் முக்கியமுன்னு அதுகளையும் பாக்கவேண்டியிருக்கு. வேண்டியமிட்டு நல்ல சம்பாத்தியம் இருக்கு என்னகுறை என சிவந்திருந்த கண்ணில் கண்ணீரை துடைத்துவிட்டு தன் சாதிதான் பெருசென நினைக்காம துண்டை உதரி தோளில் போட்டவாறு கிளம்பினார் பால் குடுத்தவளுக்கு கோடித்துணி போட கீழத் தெருவுக்கு……….
